ENG vs ZIM, Test: ஜிம்பாப்வேவை இன்னின்ஸ் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து!
இங்கிலாந்து - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி நாட்டிங்ஹாமில் உள்ள ட்ரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
அந்த அணியில் தொடக்க வீரர்கள் பென் டக்கெட் 20 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் 140 ரன்களையும், ஸாக் கிரௌலி 14 பவுண்டரிகளுடன் 124 ரன்களையும் சேர்த்து விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ஒல்லி போப்பும் சதமடித்து அசத்தினார். அதன்பின் களமிறங்கிய வீரர்களில் ஒல்லி போப் 24 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 172 ரன்களையும், ஹாரி புரூக் 6 பவுண்டரி, 3 சிக்ஸர்களுடன் 58 ரன்களிலும், கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 9 ரன்னிலும் என ஆட்டமிழக்க, இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 565 ரன்களைக் குவித்து டிக்ளர் செய்தது. ஜிம்பாப்வே அணி தரப்பில் பிளெசிங் முஸரபானி 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ஜிம்பாப்வே அணியில் தொடக்க வீரர் பிரையன் பென்னட் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 97 பந்துகளில் சதமடித்து அசத்தியதுடன், 26 பவுண்டரிகளுடன் 139 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழக்க, அதன்பின் களமிறங்கிய வீரர்களில் கிரேய்க் எர்வின் 42 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதனால் ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்ஸில் 265 ரன்களை மட்டுமே சேர்த்த நிலையில் ஆல் அவுட்டானது ஃபாலோ ஆன் ஆனது. இங்கிலாந்து தரப்பில் சோயப் பஷீர் 3 விக்கெட்டுகளையும், பென் ஸ்டோக்ஸ் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதனையடுத்து 300 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய ஜிம்பாப்பே அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 30 ரன்களைச் சேர்த்திருந்தது. இந்நிலையில் இன்று தொடங்கிய மூன்றாம் நாள் ஆட்டத்தை பென் கரண் 4 ரன்களுடனும், சீன் வில்லியம்ஸ் 22 ரன்னுடனும் தொடர்ந்தனர். இதில் இருவரும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினர். இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சீன் வில்லியம்ஸ் தனது அரைசதத்தை பூர்த்தி செய்து அசத்தினார்.
அதன்பின் 16 பவுண்டரிகளுடன் 88 ரன்களை எடுத்திருந்த சீன் வில்லியம்ஸ் ஆட்டமிழக்க, மறுமுனையில் நிதானமாக விளையாடி வந்த பென் கரண் 37 ரன்களுடன் நடையைக் கட்டினார். பின்னர் களமிறங்கிய வீரர்களில் சிக்கந்தர் ரஸா அரைசதம் கடந்ததுடன் 60 ரன்களையும், வெஸ்லி மதவெரே 31 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். இதன் காரணமாக ஜிம்பாப்வே அணி இரண்டாவது இன்னிங்ஸிலும் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 255 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
Also Read: LIVE Cricket Score
இங்கிலாந்து அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய சோயப் பஷீர் 6 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதன்மூலம் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 45 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியுள்ளது. இப்போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சோயப் பஷீர் ஆட்டநாயகன் விருதை வென்றார்.