என்னை நிலைநிறுத்திக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன் - மேத்யூ ஷார்ட்!
ஆஸ்திரேலிய அணியானது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடவுள்ளது. இதில் நடைபெற்று வரும் டி20 தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணியானது 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது. இதையடுத்து இத்தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரண்டாவது டி20 போட்டியானது இன்று கார்டிஃபில் நடைபெறவுள்ளது.
இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. மேலும் இவ்விரு அணிகளிலும் நட்சத்திர வீரர்கள் இடம்பிடித்துள்ளதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று தொடரில் முன்னிலைப் பெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆஸ்திரேலிய தொடக்க வீரர் மேத்யூ ஷார்ட் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
ஏனெனில் ஆஸ்திரேலிய அணியின் அதிரடி தொடக்க வீரர் டேவிட் வார்னர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ள நிலையில், அவரது இடத்தை நிரப்பும் வீரர் யார் என்ற போட்டி ஆஸ்திரேலிய அணியில் இருந்து வருகிறது. அந்தவரிசையில் ஸ்டீவ் ஸ்மித், மேத்யூ ஷார்ட், ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் உள்ளிட்ட வீரர்கள் மத்தியில் கடும் போட்டி நிலவி வருகிறது. இதில் ஸ்டீவ் ஸ்மித்தை டி20 வடிவத்தில் ஆஸ்திரேலிய அணி சேர்க்காமல் இருப்பதால், இளம் வீரர்கள் இடையே போட்டி உள்ளது.
அதன்படி ஸ்காட்லாந்துக்கு எதிரான டி20 தொடரில் ஆஸ்திரேலிய வீரர் ஜேக் ஃபிரேசர் மெக்கர்க் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி விளையாடினார். ஆனால், அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறினார். இதனால் இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் மேத்யூ ஷார்ட்க்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திய அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். இதனால் அவர் தனது இடத்தை தக்கவைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் இடத்தை தக்கவைக்க முயற்சிப்பதாக மேத்யூ ஷார்ட் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “டேவிட் வார்னர் தொடக்க ஆட்டக்காரராக தற்போது இல்லை. அவருடைய அந்த இடம் நிரப்பப்படுவதற்காக உள்ளது. ஸ்காட்லாந்துக்கு எதிரான சில போட்டிகளில் ஜேக் ஃபிரேசர் மெக்கர்க் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி விளையாடினார். எனவே நீங்கள் எங்கு அமர்ந்திருக்கிறீர்கள் என்று உங்களுக்குத் தெரியாது.
Also Read: Funding To Save Test Cricket
ஆனால், அந்த வாய்ப்பை நான் பயன்படுத்திக் கொண்டு, அணியின் வெற்றிக்கு எனது பங்களிப்பை வழங்கியதில் மகிழ்ச்சி அடைகிறேன். இது என்னுடைய தனிப்பட்ட இலக்கு. கடந்த 12-18 மாதங்களில் நான் சமீபத்தில் பக்கத்திற்கு உள்ளேயும் வெளியேயும் இருக்கிறேன். இப்போது டேவிட் வார்னர் வெளியேறிவிட்டார், நான் உண்மையில் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தொடக்க ஆட்டக்காரராக என்னை நிலைநிறுத்திக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.