BAN vs IND, 1st Test: டெஸ்ட் கிரிக்கெட்டில் தனித்துவ சாதனைப்படைத்த ஸ்ரேயாஸ் ஐயர்!
வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய அணி முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை 2 – 1 என்ற கணக்கில் இழந்த நிலையில் அடுத்ததாக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் களமிறங்கியுள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் ஒரு அங்கமாக நடைபெறும் இத்தொடரில் தற்போது புள்ளி பட்டியலில் 5ஆவது இடத்தில் இருக்கும் இந்தியா 2023 ஜூன் மாதம் லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற இத்தொடரை 2 – 0 என்ற கணக்கில் வெல்ல வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளது.
இந்நிலையில் இன்று சட்டோகிராம் மைதானத்தில் தொடங்கிய முதல் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. கேப்டன் ரோஹித் சர்மா உள்ளிட்ட முக்கிய வீரர்கள் இல்லாத நிலைமையில் பேட்டிங்கை துவக்கிய இந்தியாவுக்கு ஆரம்பத்திலேயே நிதானத்தை வெளிப்படுத்திய தொடக்க வீரர் சுப்மன் கில் 20 ரன்களில் தவறான ஷாட் அடித்து அவுட்டானார். அவருடன் மறுபுறம் பொறுப்புடன் செயல்பட வேண்டிய தற்காலிக கேப்டன் கேஎல் ராகுல் வழக்கம் போல தடவலாக செயல்பட்டு 22 ரன்களில் போல்ட்டாகி சென்றார்.
போதாகுறைக்கு அடுத்து வந்த நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலியும் 1 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்ததால் 48/3 என ஆரம்பத்திலேயே தடுமாறிய இந்தியா சுமாரான தொடக்கத்தை பெற்றது. அந்த நிலையில் ஜோடி சேர்ந்த செட்டேஸ்வர் புஜாரா தனக்கே உரித்தான பாணியில் நங்கூரமாக பேட்டிங் செய்த நிலையில் மறுபுறம் தன்னுடைய வழக்கமான ஸ்டைலில் வெளுத்து வாங்கிய ரிசப் பந்த் 4ஆவது விக்கெட்டுக்கு 64 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவை சரிவிலிருந்து மீட்டெடுத்த போது 6 பவுண்டரி 2 சிக்ஸருடன் அதிரடியாக 46 ரன்களில் அவுட்டானார்.
இருப்பினும் அவருக்குப் பின் களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் நங்கூரமாக நின்று புஜாராவுடன் சேர்ந்து இந்தியாவை வலுப்படுத்தும் முயற்சியில் விளையாடி வருகிறார். தற்போது 5ஆவது விக்கெட்டுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்துவரும் இருவரும் அரைசதம் அடித்து நங்கூரம் போல் களத்தில் இருக்கின்றனர்.
முன்னதாக கடந்த டிசம்பர் மாதம் நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் கான்பூர் போட்டியில் அறிமுகமான ஸ்ரேயஸ் ஐயர் முதல் போட்டியில் சதமடித்து 105 ரன்கள் விளாசி அசத்தார். அதன் பின் 65, 18, 14, 27, 92, 67, 15, 19, 41* என தன்னுடைய முதல் 10 இன்னிங்ஸில் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி பெரிய அளவில் சொதப்பாமல் குறைந்தபட்சம் இரட்டை இலக்க ரன்களை எடுத்து வருகிறார். இதன் வாயிலாக இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தன்னுடைய முதல் 10 இன்னிங்ஸில் இரட்டை இலக்க ரன்களை எடுத்த முதல் வீரர் என்ற தனித்துவமான சாதனையையும் ஸ்ரேயஸ் ஐயர் படைத்துள்ளார்.
இதற்கு முன் சச்சின் முதல் தோனி உட்பட வரலாற்றின் அத்தனை இந்திய பேட்ஸ்மேன்களும் தங்களுடைய முதல் 10 டெஸ்ட் இன்னிங்ஸில் தொடர்ந்து இரட்டை இலக்க ரன்களை பதிவு செய்ததில்லை. மேலும் என்ன தான் ஷார்ட் பிட்ச் பந்துகளில் தடுமாறும் பலவீனம் இவரிடம் இருந்தாலும் ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதுவும் சுழலுக்கு சாதகமான ஆடுகளங்களில் அற்புதமாக செயல்பட்டு வருகிறார். அதன் காரணமாகவே அனைத்து வகையான கிரிக்கெட்டையும் சேர்த்து இந்த 2022ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரராகவும் சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.