பிசிசிஐ கட்டளைக்கு கட்டுப்பட்ட ஸ்ரேயாஸ் ஐயர்; ரஞ்சி கோப்பை தொடருக்கு திரும்புகிறார்!

Updated: Tue, Feb 27 2024 20:48 IST
பிசிசிஐ கட்டளைக்கு கட்டுப்பட்ட ஸ்ரேயாஸ் ஐயர்; ரஞ்சி கோப்பை தொடருக்கு திரும்புகிறார்! (Image Source: Google)

ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் குறித்த பேச்சுகள் தொடங்கியதிலிருந்தே இந்திய கிரிக்கெட் அணியில் பல்வேறு சர்ச்சைகள் தொடர்ந்து வருகிறது. ஏனெனில் இந்திய அணியில் விளையாடும் சில வீரர்கள் சர்வதேச தொடர்களையும் புறக்கணித்து ஐபிஎல் தொடருக்கான வேலைகளில் இறங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிலும் இந்திய அணியின் சில முக்கிய வீரர்கள் பிசிசிஐயின் எதிர்ப்பையும் மீறி இதனைச் செய்துவருவதுதான் ஆச்சரியமான விஷயம்.

அந்தவகையில் இந்திய அணியின் நட்சத்திர மிடில் ஆர்டர் வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் சமீபத்தில் இங்கிலாந்து அணிக்கெதிரான முதலிரண்டு போட்டிகளில் சொதப்பிய காரணத்தால், எஞ்சிய டெஸ்ட் போட்டிகளிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். மேலும் அவர் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரிலும் விளையாட பிசிசிஐயால் அறிவுறுத்தப்பட்டிருந்தார். ஆனால் பிசிசிஐ-யின் எச்சரிக்கையையும் மீறி அவர் ரஞ்சி கோப்பை தொடரை புறக்கணித்து வந்தார். 

மேலும் ஒருபடி மேல் சென்று காயம் காரணமாகவே ரஞ்சி கோப்பை தொடரில் பங்கேற்கவில்லை என்றும் தெரிவித்திருந்தார். ஆனால் தேசிய கிரிக்கெட் அகாடமியின் மருத்துவ குழு தலைவர் நிதின் படேல், எந்தவொரு இந்திய வீரரும் புதிய காயங்களைச் சந்திக்கவில்லை என்றும், ஸ்ரேயாஸ் ஐயர் விளையாடுவதற்கு தேவையான முழு உடற்தகுதியுடன் உள்ளார் என்றும் தெரிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக வெடித்தது. 

ஏனெனில் இந்திய அணியில் இடம்பிடித்துள்ள பெரும்பாலான வீரர்கள் ரஞ்சி கோப்பை போன்று உள்ளூர் தொடர்களை தவிர்த்து ஐபிஎல் தொடரில் விளையாட ஆர்வம் கட்டிவருவதே இதற்கு காரணமாக பார்க்கப்பட்டது. இதன் காரணமாக ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷான் ஆகியோரது பிசிசிஐ ஒப்பந்தங்களும் ரத்து செய்யப்படவுள்ளதாக தகவலும் வெளியானது. இதனால் அவர்கள் சர்வதேச கிரிக்கெட்டிற்கு திரும்புவது பெரும் சந்தேகங்களை கிளப்பியது. 

 

இந்நிலையில் தான் வரும் மார்ச் 02ஆம் தேதி நடைபெறும் தமிழ்நாடு அணிக்கெதிரான அரையிறுதிப்போட்டியில் மும்பை அணியில் ஸ்ரேயாஸ் ஐயர் விளையாடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல் மற்றொரு வீரரான இஷான் கிஷானும் மும்பையின் உள்ளூர் டி20 லீக் தொடரான டிஒய் பாட்டில் கோப்பை தொடரில் விளையாடி வருகிறார். இதனால் பிசிசிஐயின் எச்சரிக்கைகளுக்கு பயந்து இருவரும் உள்ளூர் போட்டிகளில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளதாக பார்க்கப்படுகிறது. 

ஏற்கெனவே மும்பை ரஞ்சி அணியில் பிரித்வி ஷா, முஷீர் கான், அஜிங்கியா ரஹானே போன்ற நட்சத்திர வீரர்கள் இடம்பிடித்துள்ள நிலையில் தற்போது ஸ்ரேயாஸ் ஐயரின் வருகையும் அந்த அணிக்கு பெரும் பலத்தைக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக ஏழு ஆண்டுகளுக்கு பிறகு அரையிறுதிக்கு முன்னேறியுள்ள தமிழ்நாடு அணிக்கு சிக்கலை ஏற்படுத்தும் என்றும் கணிக்கப்படுகிறது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை