காயத்தை காரணம் காட்டி ரஞ்சி கோப்பையில் இருந்து விலகிய ஸ்ரேயாஸ் ஐயர்; உண்மையை அம்பலப்படுத்திய என்சிஏ!

Updated: Thu, Feb 22 2024 12:49 IST
Image Source: Google

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரின் முதலிரண்டு போட்டிக்கான இந்திய அணியில் இடம்பிடித்திருந்த ஸ்ரேயாஸ் ஐயர் தனது மோசமான ஃபார்ம் காரணமாக எஞ்சியுள்ள டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டு, அந்த வாய்ப்பு இளம் வீரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. 

இதனைத்தொடர்ந்து நடைபெற்றுவரும் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் ஸ்ரேயாஸ் ஐயர் பங்கேற்க வேண்டும் என்றும் பிசிசிஐ தரப்பில் அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதற்கேற்ற வகையில் நடப்பாண்டு ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் காலிறுதிச்சுற்றுக்கு தமிழ்நாடு, கர்நாடகா, விதர்பா, மும்பை, பரோடா, சௌராஷ்டிரா, மகாராஷ்டிரா மற்றும் ஆந்திர பிரதேச அணிகள் முன்னேறி இருந்தன. 

மேலும் மும்பை அணி காலிறுதிப்போட்டியில் பரோடா அணியை எதிர்த்து பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இந்நிலையில் முதுகுபிடிப்பு காரணமாக நடப்பு ரஞ்சி கோப்பை தொடரிலிருந்து விலகுவதாக ஸ்ரேயாஸ் ஐயர் விலகியது பெரும் சர்ச்சைகளுக்கு வழிவகுத்துள்ளது. ஏனெனில் சமீபத்தில் தான் இஷான் கிஷான் உள்பட பல முன்னணி வீரர்கள் ரஞ்சி கோப்பை தொடரில் விளையாட மறுத்து ஐபிஎல் தொடருக்கு தயாராகி வருவதாக பிசிசிஐ அதிருப்தி தெரிவித்திருந்தது. 

அதிலும் பிசிசிஐயின் ஒப்பந்த பட்டியளில் இடம்பிடித்திருந்த வீரர்கள் இவ்வாறு செய்து வருவது வருத்தமளிப்பதாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா சில காட்டமான கருத்துகளை தெரிவித்து வந்தார். இந்நிலையில் தற்போது ஸ்ரேயாஸ் ஐயரும் காயத்தை காரணம் காட்டி ரஞ்சி கோப்பை தொடரிலிருந்து விலகியது சர்ச்சையான நிலையில், அவரை பரிசோதித்து அறிக்கை சமர்பிக்கும் படி என்சிஏவிற்கு பிசிசிஐ உத்திரவிட்டிருந்தது. 

 

அதன்படி என்சிஏ மருத்துவர் நிதின் படேல் பிசிசிஐ-க்கு அனுப்பியுள்ள மின்னஞ்சலில், ஸ்ரேயாஸ் ஐயருக்கு எந்தவிதமான புதிய காயங்களும் ஏற்படவில்லை. மேலும் அவர் முழு உடற்தகுதியுடன் உள்ளார் என்று தெரிவித்துள்ளார். இதனால் ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்காக ஸ்ரேயாஸ் ஐயர் காயத்தை காரணமாக கூறி ரஞ்சி கோப்பை தொடரிலிருந்து விலகியுள்ளது தெரியவந்துள்ளது. 

ஏற்கெனவே இஷான் கிஷான் பணிச்சுமையை காரணம் காட்டி தென் ஆப்பிரிக்க தொடரிலிருந்து விலகி அது பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில், தற்போது ஸ்ரேயாஸ் ஐயர் காயத்தை காரணம் காட்டி ரஞ்சி கோப்பை தொடரிலிருந்து விலகியதும் மிகப்பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. இதனால் ஸ்ரேயாஸ் ஐயர் மீது பிசிசிஐ கடும் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒருவேளை ஸ்ரேயாஸ் ஐயர் மீது பிசிசிஐ நடவடிக்கை மேற்கொண்டால் அவர் மீண்டும் இந்திய அணியில் இடம்பிடிப்பது கேள்விகுறியாகும்  என கருதப்படுகிறது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை