ஐபிஎல் 2022: ஸ்ரேயாஸ் ஐயருக்கு கட்டம் கட்டும் 3 அணிகள்!

Updated: Mon, Jan 17 2022 16:35 IST
Image Source: Google

ஐபிஎல் 15ஆவது சீசனில் லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய 2 அணிகள் புதிதாக இணைகின்றன. அதனால் இந்த சீசன் முதல் 10 அணிகள் ஐபிஎல்லில் ஆடவுள்ளன. எனவே இந்த சீசனுக்கான ஏலம் மெகா ஏலமாக நடக்கவுள்ளதால், அனைத்து அணிகளும் அதிகபட்சமாக 4 வீரர்களை தக்கவைத்துக்கொண்டு மற்ற வீரர்களை விடுவித்தது.

கேஎல் ராகுல், டேவிட் வார்னர், ஸ்ரேயாஸ் ஐயர், ரஷீத் கான் ஆகிய பெரிய வீரர்கள் கழட்டிவிடப்பட்டனர். கேஎல் ராகுல் பஞ்சாப் அணியிலிருந்து அவராகவே விலகினார். டேவிட் வார்னர் சன்ரைசர்ஸிலிருந்து விலகினார். ஸ்ரேயாஸ் ஐயரை டெல்லி அணி விடுவித்தது. 

கடந்த 2015ஆம் ஆண்டிலிருந்து டெல்லி அணியில் விளையாடி வரும் ஸ்ரேயாஸ் ஐயர், 2 சீசன்களாக அந்த அணியை கேப்டன்சியும் செய்தார். காயத்தால் அவர் ஆடமுடியாததால், 2021ஆம் ஆண்டு சீசனின் முதல் பாதியில் ரிஷப் பந்த் கேப்டன்சி செய்ய, ஷ்ரேயாஸ் ஐயர் அணிக்கு வந்தபிறகும், ரிஷப்பையே கேப்டனாக தொடரவைத்தது டெல்லி அணி. அதனால் ஸ்ரேயாஸ் ஐயர் அதிருப்தியடைந்தார்.

இந்நிலையில் தான், டெல்லி அணியிலிருந்து விலகிய ஸ்ரேயாஸ் ஐயரை புதிய அணிகளான லக்னோ மற்றும் அகமதாபாத் அணிகளில் ஒன்று, ஸ்ரேயாஸை கேப்டன்சிக்காக எடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. 

ஆனால் லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய 2 புதிய அணிகளுமே ஸ்ரேயாஸ் ஐயர் மீது ஆர்வம் காட்டவில்லை. புதிய கேப்டனை எதிர்நோக்கியிருக்கும் 3 அணிகள் ஸ்ரேயாஸ் ஐயர் மீது ஆர்வமாக உள்ளன.

ஆர்சிபி, கேகேஆர் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகிய 3 அணிகளும் ஸ்ரேயாஸ் ஐயரை எடுக்கும் முனைப்பில் உள்ளன. ஆர்சிபி அணியின் கேப்டன்சியிலிருந்து விராட் கோலி விலகியதால், புதிய கேப்டனை நியமிக்க வேண்டியிருக்கும். அதனால் நல்ல பேட்ஸ்மேனும் கேப்டன்சி அனுபவம் கொண்டவருமான ஸ்ரேயாஸ் ஐயரை எடுக்கும் முனைப்பில் உள்ளது.

அதேபோல, பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருந்த கேஎல் ராகுலும் அந்த அணியிலிருந்து வெளியேறியதால், பஞ்சாப் அணியும் ஸ்ரேயாஸ் ஐயர் மீது ஆர்வமாக உள்ளது. மேலும், 2 முறை சாம்பியனான கேகேஆர் அணியும், கம்பீருக்கு பிறகு சரியான கேப்டன் செட் ஆகாததால் புதிய கேப்டனை நியமிக்கும் முனைப்பில் உள்ளது. எனவே கேகேஆர் அணியும் ஸ்ரேயாஸ் ஐயர் மீது கண் வைத்துள்ளது.

இதுவரை ஐபிஎல் தொடரில் ஸ்ரேயாஸ் ஐயர் 87 இன்னிங்ஸ்களில் விளையாடி 2,375 ரன்களை குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை