பேட்டிங்கில் சொதப்பியதே தோல்விக்கு காரணம் - ஷுப்மன் கில்!

Updated: Mon, Apr 08 2024 12:00 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நட்சத்தின. ஏக்னா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் மட்டுமே எடுத்தது. லக்னோ அணி தரப்பில் அதிகபட்சமாக மார்கஸ் ஸ்டொய்னிஸ் 58 ரன்கள் எடுத்தார். குஜராத் அணி தரப்பில் உமேஷ் யாதவ், தர்ஷன் நல்கண்டே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இதையடுத்து 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு கேப்டன் ஷுப்மன் கில் - சாய் சுதர்ஷன் இணை சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தனர். ஆனால் அணிக்கு தேவையான தொடக்கம் கிடைத்தும் அதை பயன்படுத்த தவறிய குஜராத் அணி 18.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 130 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில் இப்போட்டியில் அடைந்த தோல்வி குறித்து பேசிய குஜராத் டைட்டன்ஸ் அணி கேப்டன் ஷுப்மன் கில், “இப்போட்டிக்கான ஆடுகளம் பேட்டிங் செய்ய நன்றாக இருந்தது,  ஆனால் எங்களுடைய பேட்டிங் தான் மோசமாக இருந்தது. இப்போட்டியில் நாங்கள் நல்ல தொடக்கத்தை பெற்றோம். ஆனால் நடு ஓவர்களில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தோம். அதிலிருந்து எங்களால் மீளவே முடியவில்லை.

எங்களுடைய பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டதாகவே நினைக்கின்றேன். ஏனெனில் இந்த ஆடுகளத்தில் லக்னோ அணி 170 முதல் 180 ரன்கள் எடுக்கும் என நினைத்தேன். ஆனால் அவர்களை 160 ரன்களில் கட்டுப்படுத்தினர். இதற்கு எங்களுடைய பந்துவீச்சாளர்களுக்கு நான் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.டேவிட் மில்லர் ஆட்டத்தை தனி ஒருவராக ஒருசில ஓவர்களிலேயே மாற்றக்கூடிய வீரர், ஏனெனில் என்னைப் பொறுத்தவரை இது எட்ட கூடிய ஒரு இலக்காக தான் இருந்தது. 

மேலும், பவர்பிளேவின் கடைசி ஓவர் என்பதால் அதனை சரியாக பயன்படுத்தி ரன்கள் சேர்க்க வேண்டும் என்று நினைத்தேன். அதன் காரணமாக அதிரடியாக விளையாட முயற்சித்த போது, தவறான ஷாட்டால் என்னுடைய விக்கெட்டை இழந்தேன். எங்கள் பந்துவீச்சாளர்கள் பந்துவீசுவதைப் பார்ப்பது பிரமாதமாக இருந்தது, நாங்கள் அவர்களை 160-165 ரன்களில் கட்டுப்படுத்த எதிர்பார்த்தோம். அதனை சரியாக செய்துள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை