இந்த சதத்தை எனது தந்தைக்கு அற்பணிக்கிறேன் - ஷுப்மன் கில்!

Updated: Wed, Aug 24 2022 09:34 IST
Shubman Gill Dedicates Century to His Father, Says This One is For My Dad (Image Source: Google)

இந்தியா - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையே நடைபெற்ற முடிந்த மூன்றாவது ஒருநாள் போட்டியில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது 13 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி மூன்று போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. கடைசியாக நடைபெற்று முடிந்த மூன்றாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியானது மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

குறிப்பாக முதல் விக்கெட்டிற்கு 63 ரன்களை சேர்த்த நிலையில் ராகுல் 30 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்து வெளியேறினார். பின்னர் அணியின் ஸ்கோர் 84 ரன்களாக இருந்தபோது 40 ரன்கள் எடுத்த நிலையில் தவானும் ஆட்டம் இழந்து வெளியேறினார். அதன் பின்னர் இஷான் கிஷனுடன் ஜோடி சேர்ந்த சுப்மன் கில் அசத்தலான ஆட்டத்தை விளையாடினார்.

ஒரு கட்டத்தில் இஷான் கிஷனும் 50 ரன்கள் எடுத்து வெளியேறிய நிலையில் ஷுப்மன் கில் மட்டும் தனியாக ஒருபுறம் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 50 ஆவது ஓவரின் முதல் பந்தில் 97 பந்துகளை சந்தித்த நிலையில் 15 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் என 130 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். அவரது இந்த அசத்தலான ஆட்டம் காரணமாக இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 289 ரன்களை குவித்தது.

பின்னர் 290 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஜிம்பாப்வே அணியானது 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 276 ரகளை மட்டுமே எடுத்ததால் 13 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியின் ஆட்ட நாயகனாகவும், அதுமட்டும் இன்றி இந்த தொடரின் நாயகனாகவும் சுப்மன் கில் தேர்ந்தெடுக்கப்பட்டார். 

இந்நிலையில் போட்டி முடிந்து பேசிய ஷுப்மன் கில், “இந்த போட்டியில் நான் அதிகளவு டாட் பால் விளையாடக்கூடாது என்று நினைத்தேன். முடிந்த அளவிற்கு நான் சிங்கிள்ஸ் எடுக்க நினைத்தேன். அதன் பிறகு எனக்கு எளிதாக ரன்கள் குவிக்கும் வாய்ப்பு தெரிந்தது. அதன் பின்னர் நான் மிகச் சிறப்பான ஷாட்களை விளையாட ஆரம்பித்தேன். ஒரு கட்டத்தில் நான் செட்டிலாகி விளையாடுவது எனக்கு நன்றாக தெரிந்ததால் 50 ரன்களோடு நிற்கக்கூடாது அதனை சதமாக மாற்ற வேண்டும் என்று நினைத்தேன்.

நான் அடித்த இந்த மிகச் சிறப்பான சதத்தை எனது தந்தைக்காக அர்ப்பணிக்கிறேன். ஏனெனில் அவர்தான் என்னுடைய முதல் பயிற்சியாளர். நான் பள்ளி படிக்கும் போதிலிருந்தே எனக்கு ஏகப்பட்ட அறிவுரைகளை அவர் வழங்கி வருகிறார். எனவே இந்த முதல் சதத்தினை அவருக்காக நான் அர்ப்பணிக்கிறேன்” என தெரிவித்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை