பாபர் ஆசாமின் சாதனையை சமன்செய்து ஷுப்மன் கில் உலக சாதனை!

Updated: Tue, Jan 24 2023 20:32 IST
Shubman Gill Equals Babar's Record, Scores Joint-most Runs For Player In 3-Match ODI Series (Image Source: Google)

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3ஆவது ஒருநாள் போட்டி இந்தூரில் உள்ள ஹொல்கார் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி, நியூசிலாந்து அணியின் பந்துவீச்சை மைதானத்தின் அனைத்து திசைகளிலும் சிதறடித்தனர். குறிப்பாக ஓப்பனிங் வீரர்கள் 212 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் ஷுப்மன் கில் ஆகியோர் ஆட்டத்தின் முதல் ஓவரில் இருந்தே அதிரடியை தொடங்கினர். 85 பந்துகளை சந்தித்த கேப்டன் ரோகித் 101 ரன்களை விளாசினார். மற்றொரு தொடக்க வீரரான ஷுப்மன் கில் 78 பந்துகளில் 112 ரன்களை அடித்திருந்தார். இதில் 13 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் அடங்கும்.

இந்த தொடரில் ஏற்கனவே முதல் போட்டியில் இரட்டை சதம் அடித்திருந்த ஷுப்மன் கில், 2ஆவது போட்டியில் 40 ரன்களை அடித்திருந்தார். தற்போது 112 ரன்களை அடித்துள்ளதன் மூலம் இரு தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் அதிக ரன்களை அடித்தவர் பட்டியலில் பாபர் அசாமை சமன் செய்தார். பாபர் அசாம் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக கடந்த 2016ஆம் ஆண்டு 360 ரன்களை அடித்தார். தற்போது கில் நியூசிலாந்துக்கு எதிராக 360 ரன்களை விளாசியுள்ளார்.

இதுமட்டுமல்லாமல் ஷிகர் தவானின் சாதனையும் முறியடிக்கப்பட்டுள்ளது. அதாவது ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 4 சதங்களை அடித்த இந்தியராக ஷிகர் தவான் இருந்தார். அவர் 24 இன்னிங்ஸ்களை இதற்காக எடுத்துக்கொண்டார். ஆனால் ஷுப்மன் கில் தற்போது 21 இன்னிங்ஸ்களில் தனது 4ஆவது சதத்தை அடித்துவிட்டார்.

இப்படி சாதனையுடன் தொடக்க பார்ட்னர்ஷிப் அமைக்க, அதன்பின்னர் வந்த விராட் கோலி 36 ரன்கள், துணைக்கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 54 ரன்களையும் அடித்தனர். இதனால் 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 9 விக்கெட்களை இழந்து 385 ரன்களை குவித்தது. இதையடுத்து தற்போது நியூசிலாந்து அணி இலக்கை துரத்தி விளையாடி வருகிறது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை