எங்களுக்கு ஒரு பார்ட்னர்ஷிப் கூட சரியாக அமையவில்லை - ரோஹித் சர்மா!

Updated: Sat, May 27 2023 12:05 IST
Shubman Gill Is In Great Form, Hope He Continues That, Says Rohit Sharma! (Image Source: Google)

16ஆவது ஐபிஎல் தொடரின் இறுதி போட்டிக்கான இரண்டாவது அணியை தீர்மானிக்கும் இரண்டாவது குவாலிஃபையர் போட்டி அஹமதாபாத்தில் நேற்று நடைபெற்றது. இதில்  முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணிக்கு சுப்மன் கில் 129 ரன்களும், சாய் சுதர்சன் 43 ரன்களும் எடுத்து கொடுத்ததன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்த குஜராத் அணி 233 ரன்கள் குவித்தது.

அதன்பின் 234 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை துரத்தி களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு திலக் வர்மா 14 பந்துகளில் 44 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 60 ரன்களும் எடுத்து கொடுத்தாலும், திடீரென மோஹித் சர்மா ஒரே ஓவரில் 2 விக்கெட் கைப்பற்றி போட்டியில் பெரும் திருப்புமுனை ஏற்படுத்தியதாலும், மும்பை அணியின் மற்ற வீரர்கள் பெரிதாக ரன் குவிக்க தவறி அடுத்தடுத்து விக்கெட்டை இழந்ததாலும் 171 ரன்கள் எடுத்த போது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த மும்பை இந்தியன்ஸ் அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது.

குஜராத் அணி சார்பில் அதிகபட்சமாக மோஹித் சர்மா 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதே போல் முகமது ஷமி மற்றும் ரசீத் கான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். மும்பை அணிக்கு எதிரான இந்த வெற்றியின் மூலம், குஜராத் டைட்டன்ஸ் அணி இரண்டாவது முறையாக இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. 

இந்தநிலையில், குஜராத் அணியுடனான இந்த தோல்வி குறித்து பேசிய ரோஹித் சர்மா ஷுப்மன் கில் நம்ப முடியாத அளவிற்கு மிக மிக சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தியதாக பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய ரோஹித் சர்மா, “குஜராத் அணி வெற்றிக்கு தேவையான ரன்களை விட கூடுதலான ரன்கள் குவித்துவிட்டது. 25 ரன்கள் வரை குஜராத் அணி கூடுதலாக ரன் சேர்த்துவிட்டது. ஆனால் பேட்டிங் செய்ய நாங்கள் களத்திற்கு வந்த போது, எங்களால் இந்த இலக்கை எட்ட முடியும் என்ற நம்பிக்கையுடன் தான் வந்தோம். 

எங்களுக்கு ஒரு பார்ட்னர்ஷிப் கூட சரியாக அமையவில்லை. சூர்யகுமார் யாதவும், கேமிரான் க்ரீன் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டனர். ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாகவே இருந்தது, ஆனால் ஷுப்மன் கில்லை போன்று கடைசி வரை நின்று விளையாடக்கூடிய ஒரு பேட்ஸ்மேன் எங்களிடம் இல்லாமல் போய்விட்டார். ஷுப்மன் கில் பேட்டிங்கில் மிக சிறப்பாக செயல்பட்டார். குஜராத் அணி வலுவானது, ஷுப்மன் கில்லிற்கு எனது வாழ்த்துக்கள், அடுத்தடுத்த போட்டிகளிலும் அவர் இதே போன்று விளையாட வேண்டும்” என்று தெரிவித்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை