உலகக்கோப்பை 2023: பயிற்சியில் ஈடுபட்ட ஷுப்மன் கில்!
உலகக்கோப்பை தொடரில் அக்டோபர் 14ஆம் தேதி நடக்கும் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி மீது தான் அனைவரின் கண்களும் திரும்பியுள்ளன. இதற்காக ஏற்கனவே பாகிஸ்தான் அணி வீரர்கள் அகமதாபாத் நகரத்திற்கு சென்றுவிட்டனர். அதேபோல் இந்திய அணியின் இளம் வீரரான சுப்மன் கில் அகமதாபாத் மைதானத்தை அடைந்துவிட்டார்.
உலகக்கோப்பை தொடருக்கு முன் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஷுப்மன் கில் சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதன் காரணமாக ஆஸ்திரேலியா மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு எதிரான போட்டிகளில் சுப்மன் கில்லால் பங்கேற்க முடியவில்லை. இவருக்கு மாற்றாக இளம் வீரரான இஷான் கிஷன் தொடக்க வீரராக களமிறங்கினார்.
தற்போது அகமதாபாத்தை அடைந்துள்ள ஷுப்மன் கில், இன்றே பயிற்சியை தொடங்கியுள்ளார். இருப்பினும் அவரின் உடல்நலத்தை பொறுத்தே பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் தேர்வு செய்யப்படுவார் என்று கூறப்படுகிறது. ஆனால் அகமதாபாத் மைதானத்தில் விளையாடினாலே விஸ்வரூபம் எடுக்கும் ஷுப்மன் கில், பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்க வேண்டும் என்று ரசிகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.
ஏனென்றால் நடப்பாண்டில் மட்டும் அகமதாபாத் மைதானத்தில் விளையாடி போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 போட்டியில் ஒரு சதம் மற்றும் ஒரு அரைசதத்தை விளாசினார். அதேபோல் ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்காக விளையாடி வரும் ஷுப்மன் கில்லுக்கு அஹ்மதாபாத் மைதானம் மற்றும் சூழல்களை நன்கு அறிந்தவர்.
ஐபிஎல் தொடரிலேயே அஹ்மதாபாத்தில் அதிக அழுத்தம் கொண்ட போட்டிகளில் ரன்களை குவித்துள்ளார். கடந்த ஐபிஎல் தொடரில் மட்டும் அஹ்மதாபாத் மைதானத்தில் விளையாடிய போட்டிகளில் ஒரு சதம் மற்றும் 5 அரைசதங்கள் உட்பட 404 ரன்களை குவித்துள்ளார் ஷுப்மன் கில். இதனால் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஷுப்மன் கில் விளையாடும் அளவிற்கு உடல்தகுதி பெற வேண்டும் என்று ரசிகர்கள் விவாதித்து வருகின்றனர்.