கிரிக்கெட் உலகை ஷுப்மன் கில் ஆள்வார் - மேத்யூ ஹைடன்!
ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இந்திய அணியின் இளம் வீரர்கள் பலர் தங்களது திறனை வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் நட்சத்திர வீரர் ஷுப்மன் கில் அடுத்தடுத்த போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றி வருகிறார்.
அந்த வகையில் நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இதுவரை 4 போட்டிகளில் விளையாடியுள்ள ஷுப்மன் கில் இரண்டு அரைசதங்களுடன், 183 ரன்களைச் சேர்த்துள்ளார். இதில் 21 பவுண்டரிகளுடன், 4 சிக்சர்களும் அடங்கும். இந்நிலையில் அடுத்த 10 ஆண்டுகளில் கிரிக்கெட் உலகை இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஷுப்மன் கில் ஆள்வார் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் மேத்யூ ஹேடன் கூறியுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மேத்யூ ஹேடன், “இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷுப்மன் கில் மிகச் சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவராகத் திகழ்கிறார். அனைத்து விதமான போட்டிகளிலும் அவர் அபாரமாக ஆடி வருகிறார். அண்மையில் டெஸ்ட் போட்டிகளில் 2 சதங்களை விளாசினார். ஒருநாள் போட்டிகளில் 4 சதங்களை அடித்தார். சர்வதேச டி20 போட்டியில் ஒரு சதத்தை எடுத்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.
தற்போது ஐபிஎல் போட்டிகளில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக அபாரமாக ஆடி வருகிறார்.அடுத்த 10 ஆண்டுகள் வரை அவர் கிரிக்கெட் உலகை ஆள்வார் என்பதில் சந்தேகமில்லை. பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணியில் தரமான பந்துவீச்சாளர்கள் உள்ளனர். எனவே போட்டியின் கடைசி வரை விளையாடி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்ல ஒருவர் தேவைப்பட்டார். அந்தப் பணியை ஷுப்மன் கில் செய்தார். அவருக்கு அபாரமான எதிர்காலம் உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.