ஐசிசி நடத்தை விதிகளை மீறியதாக சிராஜ், ஹெட்டிற்கு அபராதம்!
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில் பெர்த்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்திய நிலையில், அடிலெய்டில் நடைபெற்ற பகலிரவு டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியைச் சந்தித்து விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.
அதன்படி இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 180 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில், பதிலுக்கு ஆஸ்திரேலிய அணியோ முதல் இன்னிங்ஸில் 337 ரன்களைக் குவித்தது. அதன்பின் இரண்டாவது இன்னிங்ஸிலும் இந்திய அணி பேட்டிங்கில் சோபிக்க தவறியதுடன் 175 ரன்களில் ஆல் அவுட்டானது. இதனால் அஸ்திரேலிய அணிக்கு வெறும் 19 ரன்களை மட்டுமே இலக்காக நிர்ணயித்திருந்தது.
அதன்படி இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலியா அணி பத்து விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணியானது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-1 என்ற கணக்கில் தொடரையும் சமன்செய்து அசத்தியுள்ளது. மேலும் இப்போட்டியில் சதமடித்து அசத்திய டிராவிஸ் ஹெட் இப்போட்டியின் ஆட்டநாயகன் விருதினை வென்றார்.
இப்போட்டியின் போது சதமடித்து விளையடி வந்த டிராவிஸ் ஹெட்ட் 140 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் முகமது சிராஜ் பந்துவீச்சில் க்ளீன் போல்டாகினார். அப்போது விக்கெட்டை இழந்த விரக்தியில் பெவிலியனுக்கு திரும்பிய டிராவிஸ் ஹெட்டை பார்த்து முகமது சிராஜ் ஆக்ரோஷமாக கொண்டாடினார். இதனால் இருவருக்கும் இடையே களத்தில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் களத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது.
இதையடுத்து இருவரும் மாறி மாறி தங்கள் தரப்பு நியாங்களை தெளிவுபடுத்தி விளக்கமளித்தனர். இந்நிலையில் இப்போட்டியின் போது ஐசிசி-யின் நடத்தை விதிகளை மீறியதாக முகமது சிராஜ் மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகியோருக்கு ஐசிசி அபராதம் விதித்துள்ளது. அதன்படி, ஐசிசி நடத்தை விதிகளை மீறியதாக இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜுக்கு போட்டிக் கட்டணத்திலிருந்து 20 சதவீதம் அபராதம் விதிப்பதாக ஐசிசி அறிவித்துள்ளது.
Also Read: Funding To Save Test Cricket
இதுதவிர்த்து ஆஸ்திரேலிய அணி வீரர் டிராவிஸ் ஹெட்டிற்கு எந்தவித கட்டணமும் அபராதமாக விதிக்கப்படவில்லை. ஆனால், முகமது சிராஜ் மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகியோருக்கு தலா ஒரு டிமெரிட் புள்ளியை அபராதமாக ஐசிசி விதித்துள்ளது. இது கடந்த 24 மாதங்களுக்குள் அவர்கள் செய்த முதல் குற்றம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதில் வீரர்கள் 5 டிமெரிட் புள்ளிகளை பெறும் பட்சத்தியில் போட்டியில் விளையாட தடைவிதிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.