சூதாட்டம் தொடர்பாக முகமது சிராஜ் பிசிசிஐயில் புகார்!
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 16ஆவது சீசன் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் இடம் பெற்றுள்ள முகமது சிராஜ் சிறப்பாக பந்து வீசி வருகிறார். இந்த நிலையில், இந்தியா வந்த ஆஸ்திரேலியா 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரிலும், 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரிலும் பங்கேற்றது.
ஒரு நாள் போட்டியின் போது கிரிக்கெட் சூதாட்டத்தால் பணத்தை இழந்த ஹைதராபாத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜை அணுகியிருக்கிறார். இது தொடர்பாக உடனடியாக முகமது சிராஜ், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ)-ன் ஊழல் தடுப்பு பிரிவு (ஏசியு)க்கு புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் பேரில் விசாரணையை மேற்கொண்ட அதிகாரிகள் அந்த நபர் பிடித்து அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அவர் ஹைதராபாத்தைச் சேர்ந்த நபர் என்று தெரிய வந்துள்ளது. ஒவ்வொரு போட்டிக்கும் பந்தயம் கட்டி கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். ஒரு கட்டத்தில் எல்லா பணத்தையும் இழந்த நிலையில், முகமது சிராஜை அணுகியிருக்கிறார். அவர், சிராஜிடம் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளின் உள் விஷயங்களை தன்னிடம் சொன்னால் பெரிய தொகை தருவதாக கூறியிருக்கிறார்.
இதைத் தொடர்ந்து சிராஜ் அளித்த புகாரின் பேரில் அவர் அமலாக்க துறை அதிகாரிகள் அந்த நபரை கைது செய்து மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா போட்டி முடிந்து ஒரு மாதம் ஆன நிலையில், இப்போது இப்படியொரு செய்தி வெளியாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.