ஐபிஎல் 2023: சிசாண்டா மகாலாவை ஒப்பந்தம் செய்தது சிஎஸ்கே!
ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசனுக்கான அட்டவணை சமீபத்தில் வெளியானது. அதன்படி போட்டிகள் மார்ச் 31ஆம் தேதி துவங்கி மே 28ஆம் தேதி முடிய உள்ளது. தொடக்க போட்டியும், பைனலும் அகமதாபாத் மைதானத்தில் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கரோனா காரணமாக கடந்த இரண்டு சீசன்களில் அணிகள், தங்களது ஹோம் கிரோண்டில் விளையாட முடியாத நிலை இருந்தது. இந்நிலையில், இந்தாண்டில் அனைத்து அணிகளும் தங்களது ஹோம் கிரோண்டில் விளையாடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது சிஎஸ்கே ரசிகர்களுக்கு கூடுதல் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது.
கேப்டன் மகேந்திரசிங் தோனி தனது கடைசிப் போட்டியை சென்னை சேப்பாக்கத்தில் விளையாடுவேன் எனக் கூறியிருந்தார். அதன்படி இந்தாண்டு கோப்பையை வென்றுகொடுத்துவிட்டு, சென்னையில் ஓய்வு அறிவிப்பை வெளியிடுவார் என ரசிகர்கள் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள். இதற்காக, சிஎஸ்கே வீரர்கள் பயிற்சி முகாமை தொடங்கிவிட்டனர்.
இந்நிலையில், சிஎஸ்கேவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் வகையில் ஒரு செய்தி சமீபத்தில் வெளியானது. சிஎஸ்கேவின் வேகப்பந்து வீச்சாளர், நியூசிலாந்து வீரர் கைல் ஜேமிசன் ஐபிஎல் 16ஆவது சீசனில் இருந்து விலகுவதாக அறிவித்தார். ஜேமிசனுக்கு கடந்த சில மாதங்களாகவே முதுகு வலி பிரச்சினை இருந்து வருகிறது. அதற்காக அவர் தற்போது அறுவை சிகிச்சை செய்ய உள்ளார். இந்த அறுவை சிகிச்சைக்கு பிறகு 4 மாதங்கள் வரை ஓய்வில் இருக்க வேண்டிய நிலை இருக்கிறது.
இதனால்தான், ஜேமிசன் ஐபிஎல் 16ஆவது சீசனில் இருந்து விலகியுள்ளார். ஏற்கனவே, கடந்த ஆண்டில் தீபக் சஹார் விலகியதால், சிஎஸ்கே கடும் பின்னடைவை சந்தித்திருந்தது. தற்போது, தீபக் சஹார் சரியான பார்மில் இருக்கிறாரா என்றே தெரியவில்லை. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில், உயர்ந்த பௌலர்கள் அதிகம் தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பதால்தான், ஜேமிசனை சிஎஸ்கே வாங்கியது. இந்நிலையில், அவர் விலகியிருப்பதும், தீபக் சஹார் சரியான பார்மில் இருக்கிறாரா என்பது தெரியவில்லை என்பதாலும், இந்த விஷயம் சிஎஸ்கேவுக்கு நிச்சயம் பின்னடைவான விஷயம்தான்.
இந்நிலையில், ஜேமிசனுக்கு மாற்றாக தென் ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் சிசாண்டா மகாலாவை சிஎஸ்கே தேர்வு செய்துள்ளது. 32 வயதான இவர் தென் ஆப்பிரிக்க அணிக்காக 5 ஒருநாள், போட்டி, 4 டி20 போட்டியில் மட்டும்தான் விளையாடியுள்ளார். அண்மையில் தென் ஆப்பிரிக்க டி20 லீக் தொடரில் சன் ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிக்காக 12 போட்டிகளில் 14 விக்கெட்களை கைப்பற்றி அசத்தியிருந்தார். இந்த ஒரே காரணத்திற்காக மட்டும்தான் சிஎஸ்கே இவரை வாங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.