இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் ஆஃப்கானிஸ்தன் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதலிரண்டு போட்டிகளிலும் இலங்கை அணி வெற்றிபெற்று 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று பல்லேகலேவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. 

Advertisement

அதன்படி களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணிக்கு ரஹ்மனுல்லா குர்பாஸ் - இப்ராஹிம் ஸத்ரான் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் 13 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இப்ராஹ்மி ஸத்ரான் தனது விக்கெட்டை இழந்தார். அதன்பின் குர்பாஸுடன் இணைந்த ரஹ்மத் ஷா அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோரும் உயர்ந்தது. இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரஹ்மனுல்லா குர்பாஸ் 6 பவுண்டரி, ஒரு சிக்சர் என 48 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். 

Advertisement

அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ஹஸ்மதுல்லா ஷாஹிதியும் 5 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் இணைந்த ரஹ்மத் - அஸ்மதுல்லா இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தி வந்தனர். இதில் ரஹ்மத் ஷா அரைசதம் கடந்த நிலையில் 7 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 65 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கி இக்ராம் அலிகில் 32 ரன்களிலும், அஸ்மதுல்லா ஒமர்ஸாய் 54 ரன்களுடனும் என ஆட்டமிழந்தனர். 

பின்னர் களமிறங்கிய முகமது நபி, அஷ்ரஃப் உள்ளிட்ட வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, ஆஃப்கானிஸ்தான் அணி 48.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 266 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இலங்கை அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய பிரமோத் மதுஷன் 3 விக்கெட்டுகளையும், அசிதா ஃபெர்னாண்டோ, துனித் வெல்லலாகே, அகிலா தனஞ்செயா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். 

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணிக்கு பதும் நிஷங்கா - அவிஷ்கா ஃபெர்னாண்டோ இணை சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்து அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்தனர். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய இருவரும் அரைசதம் கடந்ததுடன், இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 173 ரன்களையும் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர். 

பின் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட அவிஷ்கா ஃபெர்னாண்டோ 10 பவுண்டரி, 5 சிக்சர்கள் என 91 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அதன்பின் களமிறங்கிய குசால் மெண்டிஸும் 4 சிச்கர்களை விளாசி 40 ரன்களில் ஆட்டமிழக்க, மறுபக்கம் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய பதும் நிஷங்கா தனது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதன்பின் 16 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 118 ரன்கள் சேர்த்த நிலைல் பதும் நிஷங்கா ஆட்டமிழந்தாலும், அதன்பின் வந்த வீரர்கள் எளிதாக இலக்கை எட்டினர்.

Advertisement

இதன்மூலம் இலங்கை அணி 35.2 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆஃப்கானிஸ்தான் அணியை வீழ்த்தியது. இதன்மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இலங்கை அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி ஆஃப்கானிஸ்தானை ஒயிட்வாஷ் செய்தது. மேலும் இத்தொடரில் இரட்டை சதம் மற்றும் சதம் என விளாசி வெற்றிக்கு காரணமாக இருந்த பதும் நிஷங்கா இப்போட்டியின் ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை வென்றார்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News