SL vs BAN, 1st ODI: வநிந்து ஹசரங்கா, கமிந்து மெண்டிஸ் சுழலில் வீழ்ந்தது வங்கதேசம்!

Updated: Wed, Jul 02 2025 21:50 IST
Image Source: Google

SL vs BAN, 1st ODI: வங்கதேச அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர்கள் வநிந்து ஹசரங்கா மற்றும் கமிந்து மெண்டிஸ் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர்.

இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து வரும் வங்கதேச அணியானது தற்சமயம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இலங்கை - வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி கொழும்புவில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீசுவதாக அறிவிக்க, இலங்கை அணி தரப்பில் பதும் நிஷங்கா மற்றும் நிஷான் மதுஷ்கா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிஷங்கா ரன்கள் ஏதுமின்றியும், நிஷான் மதுஷ்கா 6 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்தனர். 

அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய கமிந்து மெண்டிஸும் ரன்கள் ஏதுமின்றி ஆட்டமிழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த குசால் மெண்டிஸ் மற்றும் கேப்டன் சரித் அசலங்கா இணை விக்கெட் இழப்பை தடுத்ததுடன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரையும் உயர்த்தினர். இதில் இருவரும் இணைந்து 60 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், குசால் மெண்டிஸ் 6 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 45 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அதன்பின் களமிறங்கிய ஜனித் லியானகே 29 ரன்னிலும், மிலன் ரத்னயகே மற்றும் வநிந்து ஹசரங்கா ஆகியோர் தலா 22 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்தனர். 

ஒருபக்கம் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய சரித் அசலங்கா சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 5ஆவது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதன்பின் 6 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 106 ரன்களைச் சேர்த்த நிலையில் சரித் அசலங்கா விக்கெட்டை இழக்க அடுத்து களமிறங்கிய வீரர்களும் சோபிக்க தவறினர். இதனால் இலங்கை அணி 49.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 244 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. வங்கதேச அணி தரப்பில் தஸ்கின் அஹ்மத் 4 விக்கெட்டுகளையும், தன்ஸிம் ஹசன் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய வங்கதேச அணியில் தொடக்க வீரர் பர்வேஸ் ஹொசைன் எமன் 13 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் இணைந்த தன்ஸித் ஹசன் மற்றும் நஜ்முல் ஹொசைன் சாண்டோ இணை ஓரளவு தக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தன்ஸித் ஹசன் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதம்பின் நஜ்முல் ஹொசைன் சானோடோ 23 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய லிட்டன் தாஸ் ரன்கள் ஏதுமின்றி ஆட்டமிழந்தார். 

அதன்பின் 9 பவுண்டரி ஒரு சிக்ஸர் என 62 ரன்களில் தன்ஸித் ஹசன் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய தாவ்ஹித் ஹிரிடோய், கேப்டன் மெஹிதி ஹசன் மிராஸ், தன்ஸிம் ஹசன் ஷாகிப், தஸ்கின் அஹ்மத் மற்றும் தன்விர் இஸ்லாம் உள்ளிட்டோர் வந்த வேகத்திலேயே சொரப் ரன்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இதனால் அந்த அணி 125 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அச்சயமத்தில் கைவசம் ஒரு விக்கெட் மட்டுமே இருந்த நிலையில் அதிரடியாக விளையாடிய ஜக்கார் அலி தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். 

Also Read: LIVE Cricket Score

இறுதியில் 4 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 51 ரன்களைச் சேர்த்த நிலையில் ஜக்கார் அலி விக்கெட்டை இழக்க வங்கதேச அணி 35.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது. இலங்கை அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய வநிந்து ஹசரங்கா 4 விக்கெட்டுகளையும், கமிந்து மெண்டிஸ் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன்மூலம் இலங்கை அணி 77 ரன்கள் வித்தியசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தியதுடன், 1-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரிலும் முன்னிலைப் பெற்று அசத்தியுள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை