SL vs IND: ஹர்திக் பாண்டியாவிற்கு ஆதரவராக கருத்து தெரிவித்த முகமது கைஃப்!
இந்திய அணியின் மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர்களில் ஒருவர் ஹர்திக் பாண்டியா. மேலும் இவர் கடந்த சில ஆண்டுகளாகவே இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டும் வந்துள்ளார். அதுதவிர்த்து நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரிலும் இந்திய அணியின் துணைக்கேப்டனாக செயல்பட்டதுடன், அத்தொடரில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டு இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வெல்லவும் உறுதுணையாக இருந்தார்.
இதனால் இனிவரும் காலங்களில் ஹர்திக் பாண்டியா தான் இந்திய அணியின் நிரந்தர கேப்டனாக நியமிக்கப்படுவார் என்ற கருத்துகள் எழுந்து வந்த நிலையில், தற்போது அவரை ஒட்டுமொத்தமாக கேப்டனுக்கான தேர்வில் இருந்து பிசிசிஐ ஒதுக்கியுள்ளது போல், புதிய கேப்டனை அறிவித்துள்ளது. அதன்படி எதிர்வரவுள்ள இலங்கை அணிக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் பங்கேற்கும் இந்திய அணி நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டது.
இதில் டி20 அணியின் புதிய கேப்டனாக சூர்யகுமார் யாதவ் நியமிக்கப்பட்டதுடன், துணைக்கேப்டனாக ஷுப்மன் கில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதிலும் ஹர்திக் பாண்டியா டி20 அணியில் இடம்பிடித்திருக்கும் பட்சத்திலும் சூர்யகுமார் யாதவிற்கு கேப்டன் பதிவியை கொடுத்துள்ளதுன், ஷுப்மன் கில்லை துணைக்கேப்டனாக பிசிசிஐ நியமித்திருப்பது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைஃப், “ஹர்திக் பாண்டியா ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக 2 வருடங்களாக கேப்டனாக இருந்துள்ளதுடன், தனது முதல் முயற்சியிலேயே சாம்பியன் பட்டத்தையும் வென்று அசத்தினார். மேலும் அவருக்கு இந்திய டி20 அணியின் கேப்டனாகவும் பணியாற்றிய அனுபவம் உள்ளது. மேலும் டி20 உலகக் கோப்பை தொடரிலும் அணியின் துணைக் கேப்டனாகவும் இருந்தார்.
ஆனால் இப்போது இந்திய அணிக்கு புதிய பயிற்சியாளர் வந்துள்ளார். அதனால் அவரது முடிவின் காரணமாக சில மாற்றங்களும் நிகழ்ந்துள்ளன. அந்தவகையில் தற்போது கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கும் சூர்யாகுமார் யாதவும் ஒரு சிறந்த வீரர், அவர் பல ஆண்டுகளாக இந்திய அணிக்காக விளையாடி வருகிறார். அதனால் அவர் கேப்டன் பொறுப்பை சிறப்பாகச் செய்வார் என்று நம்புகிறேன். ஆனால், ஹர்திக் பாண்டியாவிற்கான ஆதரவை கொடுத்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.
Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy
தற்போது அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள கௌதம் கம்பீர் அனுபவம் வாய்ந்த கேப்டனும் பயிற்சியாளருமாக கிரிக்கெட்டை நன்றாகப் புரிந்துகொள்வார் என்பது எனக்கு தெரியும். ஆனால் கேப்டன் பதவி கிடைக்காத அளவுக்கு ஹர்திக் பாண்டியா எந்த தவறும் செய்யவில்லை என்று நினைக்கிறேன்” என தெரிவித்துள்ளார். முகமது கைஃபின் இந்த கருத்தானது தற்சமயம் பேசுபொருளாக மாறியுள்ளது.