SL vs IRE, 2nd Test: அடுத்தடுத்து சதங்களை விளாசிய இலங்கை வீரர்கள்; தடுமாறும் அயர்லாந்து!

Updated: Thu, Apr 27 2023 18:37 IST
Image Source: Google

அயர்லாந்து அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. முதல் டெஸ்ட்டில் இலங்கை அணி இன்னிங்ஸ் மற்றும் 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. கடந்த 24ஆம் தேதி தொடங்கி நடந்துவரும் 2ஆவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. 

முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணியின் கேப்டன் பால்பிர்னி 95 ரன்களை குவித்தார். அதன்பின்னர் பால் ஸ்டர்லிங் மற்றும் கர்டிஸ் காம்பெர் ஆகிய இருவரும் அபாரமாக பேட்டிங் ஆடி சதமடித்தனர். ஸ்டர்லிங் 103 ரன்களையும், காம்ஃபெர் 111 ரன்களையும் குவிக்க, டக்கர் அவர் பங்கிற்கு 80 ரன்கள் அடிக்க, முதல் இன்னிங்ஸில் அயர்லாந்து அணி 492 ரன்களை குவித்தது. 

இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த்  இலங்கை அணியின் தொடக்க வீரர்கள் மதுஷ்கா மற்றும் கருணரத்னே இணைந்து அபாரமாக பேட்டிங் ஆடி முதல் விக்கெட்டுக்கு 228 ரன்களை குவித்தனர். சிறப்பாக விளையாடி சதமடித்த கேப்டன் கருணரத்னே 115 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதன்பின்னர் தொடக்க வீரர் மதுஷ்காவுடன் ஜோடி சேர்ந்த குசால் மெண்டிஸும் அபாரமாக பேட்டிங் செய்ய, இருவருமே இரட்டை சதமடித்தனர். 

இதில் மதுஷ்கா 205 ரன்களையும், குசால் மெண்டிஸ் 245 ரன்களையும் குவித்தனர். மேலும் 2ஆவது விக்கெட்டுக்கு இருவரும் சேர்ந்து 268 ரன்களை குவித்தனர். அதன்பின்னர் ஏஞ்சலோ மேத்யூஸும் அபாரமாக விளையாடி சதமடிக்க, அவர் சதமடித்ததும் முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது இலங்கை அணி. இதன்மூலம் அந்த அணி முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட் இழப்பிற்கு 704 ரன்களை குவித்து டிக்ளேர் செய்தது.

அதன்பின் 212 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய அயர்லாந்து அணியின் தொடக்க வீரர்கள் ஜேம்ஸ் மெக்கலம் 10 ரன்களிலும், பீட்டர் மூர் 19 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். அதைத்தொடர்ந்து  ஜோடி சேர்ந்த கேப்டன் ஆன்ரூ பால்பிர்னி - ஹேரி டெக்டர் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இதன்மூலம் நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் அயர்லாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் 2 விக்கெட்டுகளை இழந்து 54 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் பால்பிர்னி 18 ரன்களையும், ஹேரி டெக்டர் 7 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இதையடுத்து 158 ரன்கள் பின் தங்கிய நிலையில் அயர்லாந்து அணி நாளை 5ஆம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை