SL vs IRE 2nd Test: கருணரத்னே, மதுஷங்கா சதம்; முன்னிலை நோக்கி இலங்கை!
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அயர்லாந்து அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி இன்னிங்ஸ் வெற்றிபெற்று, 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி கலேவில் கடந்த ஏப்ரல் 24ஆம் தேதி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய அயர்லாந்து அணி பால் ஸ்டிர்லிங், கர்டிஸ் காம்பெர் ஆகியோரது அபார சதத்தின் மூலம் முதல் இன்னிங்ஸில் 492 ரன்களைக் குவித்து ஆல் அவுட்டானது. இலங்கை அணி தரப்பில் பிரபாத் ஜெயசூர்யா 5 விக்கெட்டுகளையும், விஷ்வா ஃபெர்னாண்டோ, அசிதா ஃபெர்னாண்டோ தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இலங்கை அணிக்கு நிஷன் மதுசங்கா - திமுத் கருணரத்னே இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் இணைந்து விக்கெட்டை இழக்காமல் இரண்டாம் நாள் ஆட்டத்தை முடித்தனர். இதனால் இலங்கை அணி விக்கெட் இழப்பின்றி 81 ரன்களைச் சேர்த்திருந்தது.
இதில் நிஷன் மதுசங்கா 41 ரன்களுடனும், திமுத் கருணரத்னே 39 ரன்களுடனும் இன்று மூன்றாம் நாள் ஆட்டத்தை, 411 ரன்கள் பின் தங்கிய நிலையில் தொடர்ந்தது. ஆரம்பம் முதலே அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் சதமடித்து அசத்தினர்.
அதன்பின் 115 ரன்களைச் சேர்த்திருந்த கேப்டன் திமுத் கருணரத்னே ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய குசால் மெண்டிஸும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடக்க, அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது.
இதன்மூலம் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 357 ரன்களைக் குவித்துள்ளது. இதில் நிஷன் மதுசங்கா 149 ரன்களுடனும், குசால் மெண்டிஸ் 83 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இதையடுத்து 135 ரன்கள் பின் தங்கிய நிலையில் நாளை நான்காம் நாள் ஆட்டத்தை இலங்கை அணி தொடரவுள்ளது.