வெஸ்ட் இண்டீஸ் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகளை உள்ளடக்கிய ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடவுள்ளது. இதில் நடைபெற்று வரும் டி20 தொடரின் முதல் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியும், இரண்டாவது போட்டியில் இலங்கை அணியும் வெற்றிபெற்று 1-1  என்ற கணக்கில் தொடரை சமன்செய்துள்ளன.

Advertisement

இந்நிலையில் இலங்கை - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று நடைபெற்றது தம்புளாவில் உள்ள ரங்கிரி தம்புளா சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் தொடக்க வீரர் எவீன் லூயிஸ் முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தர். பின்னர் இணைந்த பிராண்டன் கிங் மற்றும் ஷாய் ஹோப் இணை அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினர். 

Advertisement

இப்போட்டியில் சிறப்பான தொடக்கத்தை பெற்றிருந்த பிராண்டன் கிங் 3 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 23 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ரோஸ்டன் சேஸும் 8 ரன்களுடன் நடையைக் கட்டினார். அவர்களைத் தொடர்ந்து 6 ரன்கள் எடுத்த நிலையில் ரூதர்ஃபோர்டும் தனது விக்கெட்டை இழக்க, வெஸ்ட் இண்டீஸ் அணி 62 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் ரோவ்மன் பாவெல் - குடகேஷ் மோட்டி இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். 

இருவரும் இணைந்து அடுத்தடுத்து சிக்ஸர்களை பறக்கவிட்டதுடன், 6ஆவது விக்கெட்டிற்கு 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். அதன்பின் அதிரடியாக விளையாடி வந்த குடகேஷ் மோட்டி ஒரு பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 32 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து ரோவ்மன் பாவெலுடன் இணைந்த் ரொமாரியோ ஷெப்பர்டும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் உயர்ந்தது. இதில் தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ரோவ்மன் பாவெல் ஒரு பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 37 ரன்களில் ஆட்டமிழந்தார். 

இறுதியில் ரொமாரியோ ஷெப்பர்ட்டும் தனது பங்கிற்கு 18 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழக்க, வெஸ்ட் இண்டீஸ் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்களைச் சேர்த்தது. இலங்கை அணி தரப்பில் மஹீஷ் தீக்சனா, வநிந்து ஹசரங்கா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதனையடுத்து 163 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணிக்கு பதும் நிஷங்கா - குசால் மெண்டிஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய பதும் நிஷங்கா அடுத்தடுத்து பவுண்டரிகளை பறக்கவிட்டு அசத்தினார். 

இதன்மூலம் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 60 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், 7 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 39 ரன்களைச் சேர்த்து பதும் நிஷங்கா தனது விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய குசால் பெரேராவும் சிரப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் மளமளவென உயரத்தொடங்கியது. இப்போட்டியில் சிரப்பான ஆட்டத்ததி வெளிப்படுத்திய குசால் மெண்டிஸ் தனது 15ஆவது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அவரைத்தொடர்ந்து குசால் பெரேராவும் தனது 15ஆவது டி20 அரைசதத்தை பதிவுசெய்ய இலங்கை அணியின் வெற்றியும் உறுதியானது. 

Advertisement

மேற்கொண்டு இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த குசால் மெண்டிஸ் 5 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 68 ரன்களையும், குசால் பெரேரா 7 பவுண்டரிகளுடன் 55 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் இலங்கை அணி 18 ஓவர்களிலேயே இலக்கை எட்டியதுடன் 9 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை இலங்கை அணி 2-1 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி கைப்பற்றி அசத்தியுள்ளது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News