இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி!

Updated: Thu, May 16 2024 21:31 IST
Image Source: Google

ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது வரும் அக்டோபர் மாதம் வங்கதேசத்தில் நடைபெறவுள்ளது. இத்தொடருக்காக அனைத்து அணிகளும் தற்போதிலிருந்தே தயாராகி வருகிறது. அதன்படி நடப்பு மகளிர் டி20 உலகக்கோப்பை தொடருக்கு தகுதிப்பெற்றுள்ள இலங்கை மகளிர் அணி, வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடவுள்ளது. 

அந்தவகையில் இலங்கை மற்றும் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரானது ஜூன் 15ஆம் தேதி முதல் ஜூன் 21ஆம் தேதி வரை கலேவிலும்,  இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடர் ஜூன் 24ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை ஹம்பாந்தோட்டாவில் நடைபெறவுள்ளது. இதனைத்தொடர்ந்து இலங்கை மகளிர் அணி வரும் ஆகஸ்ட் மாதம் அயர்லாந்துக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. 

முன்னதாக இலங்கை மகளிர் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் டி20 தொடரில் விளையாடியது. இதில் டி20 தொடரை இலங்கை மகளிர் அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றிய நிலையில், ஒருநாள் தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்தும் அசத்தியது. அதன்பின் நடைபெற்று வந்த ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை தொடருக்கான தகுதிச்சுற்றிலும் விளையாடியது.

அதன்படி சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான மகளிர் டி20 உலகக்கோப்பை தகுதிச்சுற்று போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்று சாம்பியன் பட்டத்தை வென்றதுடன், நடப்பு ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடருக்கும் தகுதிப்பெற்று அசத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை