சையத் முஷ்டாக் அலி: கேரளாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது தமிழ்நாடு அணி!
இந்தியாவின் உள்ளூர் டி20 கிரிக்கெட் தொடரான சையத் முஷ்டாக் அலி தொடரின் நடப்பு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற முதல் காலிறுதிப் போட்டியில் தமிழ்நாடு அணி, கேரள அணியை எதிர்கொண்டது.
இப்போட்டியில் டாஸ் வென்ற தமிழ்நாடு அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய கேரள அணி ரோஹன் குன்னும்மாள், விஷ்ணு வினோத் ஆகியோரின் அதிரடியான ஆட்டத்தினால் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 181 ரன்களைச் சேர்த்தது.
இதில் அதிகபட்சமாக விஷ்ணு வினோத் 65 ரன்களையும், ரோஹன் குன்னும்மாள் 51 ரன்களையும் சேர்த்தனர். தமிழ்நாடு அணி தரப்பில் சஞ்சய் யாதவ் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதையடுத்து கடின இலக்கைத் துரத்திய தமிழ்நாடு அணியில் ஜெகதீசன் 7 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த ஹரி நிஷாந்த் - சாய் சுதர்சன் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தியது.
இதில் அரைசதம் அடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட ஹரி நிஷாந்த் 32 ரன்களையும், சாய் சுதர்சன் 46 ரன்களில் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த கேப்டன் விஜய் சங்கர் அதிரடியாக விளையாடி 33 ரன்களைச் சேர்த்து பெவிலியன் திரும்பினார்.
இதனால் கடைசி மூன்று ஓவர்களில் தமிழ்நாடு அணி வெற்றிபெற 31 ரன்கள் என்ற நிலை ஏற்பட்டது. சுரேஷ் விஷ்வேஸ்வர் வீசிய அந்த ஓவரில் சஞ்சய் யாதவ் ஒரு பவுண்டரியையும், ஷாரூக் கான் இரண்டு சிக்சர்களையும் பறக்கவிட்டு அசத்தினர்.
Also Read: T20 World Cup 2021
இதனால் ஆட்டத்தின் மீதிருந்த அழுத்தம் குறைந்தது. இதனால் 19.3 ஓவர்களிலேயே தமிழ்நாடு அணி இலக்கை எட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் கேரள அணியை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் தமிழ்நாடு அணி நடப்பு சீசன் சையத் முஷ்டாக் அலி தொடரின் அரையிறுதிக்கு முன்னேறியது.