SMAT 2024: கர்நாடகா அணியிடம் படு மோசமான தோல்வியை தழுவியது தமிழ்நாடு!
நடப்பு சீசன் சையத் முஷ்டாக் அலி கோப்பை கிரிக்கெட் தொடரானது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற குரூப் பி அணிகளுக்கு இடையேயான லீக் போட்டியில் தமிழ்நாடு மற்றும் கர்நாடகா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்தூரில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற தமிழ்நாடு அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து கர்நாடகா அணியை பந்துவீச அழைத்தது.
அதன்படி களமிறங்கிய தமிழ்நாடு அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் ஜெகதீசன் ரன்கள் ஏதுமின்றியும், பாபா இந்திரஜித் 5 ரன்னிலும், பூபதி குமார் ஒரு ரன்னிலும், விஜய் சங்கர் ரன்கள் ஏதுமின்றியும் விக்கெட்டை இழக்க, கேப்டன் ஷாருக் கானும் 19 ரன்களுடன் நடையைக் கட்டினார். பின்னர் களமிறங்கிய வீரர்களில் முகமது அலி 15 ரன்னிலும், ரித்திக் ஈஸ்வரன் 12 ரன்னிலும் என விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இறுதியில் வருண் சக்ரவர்த்தி 24 ரன்களைச் சேர்க்க மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கு அட்டமிழந்தனர்.
இதனால் தமிழ்நாடு அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 90 ரன்களில் ஆல் அவுட்டானது. கர்நாடகா அணி தரப்பில் வசுகி கௌசிக், மனோஜ் பாண்டேஜ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். அதன்பின் எளிய இலக்கை நோக்கி விளையாடியா கர்நாடகா அணிக்கு மனிஷ் பாண்டே மற்றும் கேப்டன் மயங்க் அகர்வால் இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் இணைந்து தொடக்கம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்ததுடன், முதல் விக்கெட்டிற்கு 70 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
Also Read: Funding To Save Test Cricket
அதன்பின் மயங்க் அகர்வால் 30 ரன்னில் விக்கெட்டை இழந்த நிலையில், மற்றொரு தொடக்க வீரரான மனிஷ் பாண்டேவும் 4 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 42 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தனர். இருப்பினும் கர்நாடகா அணியானது 11.3 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியசத்தில் தமிழ்நாடு அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மனிஷ் பாண்டே ஆட்டநாயகன் விருதை வென்றார்.