தென் ஆப்பிரிக்க தொடரில் வரலாற்று சாதனை படைத்த ஸ்மிருதி மந்தனா!

Updated: Mon, Jun 24 2024 09:06 IST
தென் ஆப்பிரிக்க தொடரில் வரலாற்று சாதனை படைத்த ஸ்மிருதி மந்தனா! (Image Source: Google)

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் தென் ஆப்பிரிக்க மகளிர் அணியானது மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. இத்தொடரின் முடிவில் இந்திய மகளிர் அணி மூன்று போட்டிகளிலும் வெற்றிபெற்றதுடன் 3-0 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்க மகளிர் அணியை வீழ்த்தி ஒருநாள் தொடரை முழுமையாக கைப்பற்றியது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி நேற்று பெங்களூருவில் நடைபெற்றது. 

இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க மகளிர் அணியில் கேப்டன் லாரா வோல்வார்ட்டை தவிர்த்து மற்ற வீராங்கனைகள் சோபிக்க தவறியதால் 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 215 ரன்களைச் சேர்த்தது. அந்த அணியில் அதிகபட்சமாக லாரா வோல்வார்ட் 61 ரன்களைச் சேர்த்தார். இந்திய அணி தரப்பில் அருந்ததி ரெட்டி மற்றும் தீப்தி சர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 

இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணியில் தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 90 ரன்களையும், கேப்டன் ஹர்மன்பிரித் கவுர் 42 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் இந்திய அணி 40.4 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 6 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இந்நிலையில் இத்தொடரில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்மிருதி மந்தன சில சாதனைகளை பதிவுசெய்துள்ளார். 

இந்த ஒருநாள் தொடரில் இரண்டு சதங்கள் மற்றும் ஒரு அரைசதம் என ஸ்மிருதி மந்தனா 3 இன்னிங்ஸில் மட்டும் 343 ரன்களைக் குவித்து அசத்தியுள்ளார். மேற்கொண்டு பந்துவீச்சிலும் ஒரு விக்கெட்டை வீழ்த்தியுள்ளார். இதன்மூலம் மூன்று போட்டிகள் கொண்ட மகளிர் ஒருநாள் தொடரில் அதிகபட்ச ரன்களைக் குவித்த வீராங்கனை எனும் சாதனையை ஸ்மிருதி மந்தனா படைத்துள்ளார். 

 

மேற்கொண்டு நேற்றைய போட்டியில் 90 ரன்களைச் சேர்த்ததன் மூலம் இந்திய மகளிர் அணி வரலாற்றில் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்களை அடித்த இரண்டாவது வீராங்கனை எனும் பெருமையைப் பெற்றுள்ளார். முன்னதாக இந்திய அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 3513 ரன்களுடன் இரண்டாம் இடத்தில் இருந்த நிலையில், ஸ்மிருதி மந்தனா 3585 ரன்களைச் சேர்த்து இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். இப்பட்டியலில் முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ் 7805 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை