தந்தையின் கனவை நிறைவேற்றிய ராணா!
இங்கிலாந்து - இந்திய மகளிர் அணிகளுக்கிடையேயான ஒரேயொரு டெஸ்ட் ஆட்டம் பிரிஸ்டாலில் நேற்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்யத் தீர்மானித்து, முதல் நாள் ஆட்டநேர முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 269 ரன்களைச் சேர்த்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஹீத்தர் நைட் 95 ரன்களையும், டாமி பியூமண்ட் 66 ரன்களையும் சேர்த்தனர். இப்போட்டியில் இந்திய அணியின் அறிமுக வீராங்கனையாக களமிறங்கிய ஸ்நே ராணா அசத்தலாக பந்து வீசி 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இப்போட்டிக்கு பின் பேசிய ராணா,“இரண்டு மாதங்களுக்கு முன்பு நான் என் தந்தையை இழந்தேன். அதுவும் இந்திய அணி அறிவிக்கப்படுவதற்கு சில நாள்களுக்கு முன்பு தான் இது நடந்தது. நான் களத்தில் இறங்கிய போது மிகவும் உணர்ச்சிவசப்பட்டேன்.
ஏனெனில் எனது தந்தை நான் மீண்டும் இந்திய அணியில் விளையாடுவதை பார்க்க விரும்பினார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவரால் அது முடியவில்லை. இது வாழ்க்கையின் ஒரு பகுதி. அதனால் இதை நான் ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும்.
காயம் காரணமாக ஓராண்டிற்கும் மேல் என்னால் விளையாடமுடியாமல் போனது. இருப்பினும் உள்ளூர் போட்டிகளில் நான் எனது திறனை வெளிப்படுத்தியதினால் என்னால் மீண்டும் அணிக்குள் நுழைய முடிந்தது.
மேலும் போட்டிக்கு முந்தைய நாள் நான் பயிற்சியாளர் மற்றும் கேப்டனிடம் எந்தெந்த வகையிலான யுக்திகளை பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து கேட்டறிந்தேன். நேற்றைய போட்டியின் போது எனக்கு அது உதவியாக இருந்தது” என்று தெரிவித்துள்ளார்.