WPL 2024: ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்த சோபனா ஆஷா!

Updated: Sun, Feb 25 2024 12:42 IST
Image Source: Google

மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 2ஆவது சீசன் நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகள் பூர்த்தி செய்து வருகிறது. இத்தொடரில் நேற்று நடைபெற்ற இரண்டாவது லீக் ஆட்டத்தில் ஸ்மிருதி மந்தனா தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்த்து அலிசா ஹீலி தலைமையிலான யுபி வாரியர்ஸ் அணி விளையாடியது. இப்போட்டியில் டாஸ் வென்ற யுபி வாரியர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

அதன்படி களமிறங்கிய ஆர்சிபி அணிக்கு சப்பினேனி மேகனா, ரிச்சா கோஷ் இருவரும் அரைசதம் கடந்து அசத்த 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 6 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக ரிச்சா கோஷ் 62 ரன்களையும், மேகனா 53 ரன்களையும் சேர்த்தனர். இதையடுத்து களமிறங்கிய யுபி வாரியர்ஸ் அணியில் கிரேஸ் ஹாரிஸ், ஸ்வேதா ஷெராவத் ஆகியோரைத் தவிர மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். 

இதனால் யுபி வாரியர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்களை மட்டுமே எடுத்தது. ஆர்சிபி அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய சோபனா ஆஷா 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதன்மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் யுபி வாரியர்ஸ் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்ததுடன், தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ளது. 

 

இந்நிலையில், இப்போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் சோபனா ஆஷா சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளர். அதன்படி மகளீர் பிரீமியர் லீக் தொடரில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் இந்திய வீராங்கனை எனும் சாதனையை சோபனா ஆஷா படைத்துள்ளார். மேலும் மரிஸான் கேப், தாரா நோரிஸ், கிம் கார்த் ஆகியோருக்கு பின் மகளிர் பிரீமியர் லீக் தொடரில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய 4ஆவது வீராங்கனை எனும் பெருமையையும் பெற்றுள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை