மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: நியூசிலாந்து கேப்டன் பதவியில் இருந்து விலகும் சோஃபி டிவைன்!
ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரானது எதிர்வரும் அக்டோபர் மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. மொத்தம் 10 அணிகள் இத்தொடரில் பங்கேற்கும் நிலையில், அந்த அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. அதில் குரூப் ஏ பிரிவில் ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை அணிகளும், குரூப் பி பிவிரில் தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், வங்கதேசம், ஸ்காட்லாந்து அணிகளும் இடம் பிடித்துள்ளன.
மேற்கொண்டு இந்த உலகக்கோப்பை தொடருக்கான புதுபிக்கப்பட்ட போட்டி அட்டவணையையும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இன்று அறிவித்துள்ளது. இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்கும் அணிகளையும் அந்தந்த நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் அறிவித்து வருகின்றன. அதன் படி, இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் பாகிஸ்தானின் மகளிர் அணிகளை அந்த நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் அறிவித்துள்ளன.
அதேசமயம் இத்தொடருக்கான நியூசிலாந்து மகளிர் அணியானது செப்டம்பர் 10ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இந்நிலையில் எதிர்வரும் மகளிர் டி20 உலகக்கோப்பை தொடருடன் அந்த அணியின் கேப்டன் சோஃபி டிவைன் தனது பதவியில் இருந்து விலகுவார் என்றும் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது.
கடந்த 2020ஆம் ஆண்டு முதல் நியூசிலாந்து மகளிர் அணியின் கேப்டனாக செயல்பட்டுவரும் சோஃபி டிவைன், தற்போது 34 வயதை கடக்கவுள்ளதால், இந்த உலகக்கோப்பை தொடருடன் அவர், டி20 கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் நியூசிலாந்து மகளிர் ஒருநாள் அணியின் கேப்டனாக சோஃபி டிவைன் தொடர்ந்து செயல்படுவார் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் நியூசிலாந்து அணியின் கேப்டன்சி குறித்து பேசிய சோஃபி டிவைன், “நியூசிலாந்து மகளிர் அணியின் இரண்டு வடிவங்களிலும் கேப்டனாக இருக்கும் பாக்கியம் கிடைத்ததில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். மேலும் கேப்டன்சியுடன் கூடுதல் பணிச்சுமை இருந்தாலும், நான் அதை ரசித்தேன். ஆனால் சில சமயங்களில் அணியின் கேப்டனாக முன்னெடுத்து செல்வது கொஞ்சம் சவாலாகவும் இருந்தது.
அதனால், டி20 அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவது எனக்கு கொஞ்சம் உதவும் என்று நம்புகிறேன். அதுமட்டுமில்லாமல் இதன் மூலம், எதிகால கேப்டன்கள வளர்ப்பதிலும் என்னால் அதிக கவனம் செலுத்த முடியும். ஆனால் நான் இன்னும் ஒருநாள் கேப்டன் பதவியை விட்டுக்கொடுக்க தயாராக இல்லை. ஆனால் என்றென்றும் என்னால் அணியின் கேப்டனாக இருக்கு முடியாது” என்று தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்து மகளிர் அணிக்காக கடந்த 2006ஆம் ஆண்டு அறிமுகமான சோஃபி டிவைன் இதுவரை 147 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 8 சதம், 15 அரைசதங்கள் என 3,860 ரன்களையும், டி20 கிரிக்கெட்டில் 135 போட்டிகளில் விளையாடி ஒரு சதம், 20 அரைசதங்கள் என 3,268 ரன்களையும் குவித்துள்ளார், மேற்கொண்டு பந்துவீச்சில் மொத்தமாக 218 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read: Funding To Save Test Cricket