ஜடேஜாவின் விருதை தட்டிப் பறித்ததற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறென் - விராட் கோலி!

Updated: Thu, Oct 19 2023 22:57 IST
Image Source: Google

இன்று இந்திய அணி வங்கதேச அணிக்கு எதிராக உலகக் கோப்பையில் ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறது. இது இந்திய அணிக்கு நான்காவது போட்டியில் நான்காவது வெற்றியாகும். இதன் மூலம் அரையிறுதி வாய்ப்பு இந்திய அணிக்கு பிரகாசமாக இருக்கிறது. இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி எட்டு விக்கெட் இழப்புக்கு 50 ஓவர்களில் 256 ரன்கள் எடுத்தது. 

பேட்டிங் செய்ய சாதகமான ஆடுகளத்தில் இந்திய பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டு வங்கதேச அணியை கட்டுப்படுத்தினார்கள். இதற்கடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா 48 சுப்மன் கில் 53 ரன்கள் எடுத்து வெளியேறினார்கள். இறுதிவரை களத்தில் நின்ற விராட் கோலி வெற்றியை உறுதி செய்து 103 ரன்கள் எடுத்தார். 

இதன்மூலம் இந்திய அணி 41.3 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. மேலும் இப்போட்டிக்கு காரணமாக இருந்த விராட் கோலிக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.     

இது குறித்து பேசிய விராட் கோலி, “ஜடேஜாவிடம் இருந்து ஆட்ட நாயகன் விருதை திருடியதற்கு நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். உலகக் கோப்பை போட்டியில் அணிக்காக நான் பெரிய பங்களிப்பை ஏற்படுத்த வேண்டும் என நினைத்தேன். உலகக்கோப்பை போட்டியில் நான் கடந்த முறை அதிக அரை சதம் அடித்தேன். இதனால் இம்முறை பெரியதாக அடிக்க வேண்டும் என்பதற்காக இவ்வாறு செய்தேன். 

கில்லிடம் நான் இதை தான் அடிக்கடி சொல்வேன். இது போன்ற சூழல் குறித்து நாம் கனவு கண்டிருப்போம். அதை நினைத்துக் கொண்டு தூங்கவும் செய்வோம். எப்படி ஆட்டத்தை தொடங்க வேண்டும் என நினைத்தமோ அதேபோல் இன்று நான் விளையாடினேன். இதன் மூலம் நானே என்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டேன். ஆடுகளமும் நன்றாக இருந்ததால் என்னுடைய இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடிந்தது. 

பீல்டர்களுக்கு இடையே பந்தை அடித்து பவுண்டரிகளை எடுக்க வேண்டும். இதுதான் என்னுடைய ஆட்டத்தின் யுக்தி. ட்ரெஸ்ஸிங் ரூமும் நல்ல முறையில் இருக்கிறது. அணியின் உத்வேகமும் சிறந்த முறையில் இருக்கிறது. அணியில் இருக்கும் உத்வேகத்தால் தான் இது போன்ற ஆட்டத்தை எங்களால் விளையாட முடிகிறது. இவ்வளவு பெரிய மக்கள் கூட்டத்திற்கு முன்பு விளையாடியதை ஸ்பெஷலாக நான் நினைக்கிறேன்” என்று தெரிவித்தார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை