ஐசிசி தலைவராகிறார் சௌரவ் கங்குலி?

Updated: Thu, Jul 28 2022 09:19 IST
Image Source: Google

இந்தியாவின் நட்சத்திர முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி. இவர் கடந்த 2000ஆம் ஆண்டு சூதாட்ட புகாரில் இந்தியா சிக்கி தவித்த போது கேப்டனாக பொறுப்பேற்று வீரேந்தர் சேவாக், யுவ்ராஜ் சிங் உள்ளிட்ட தரமான இளம் வீரர்களை கண்டறிந்தார். மேலும் அவர்களுக்கு தேவையான வாய்ப்பை வழங்கி அடுத்த சில வருடங்களிலேயே ஆஸ்திரேலியா போன்ற தரமான அணிகளை வீழ்த்தும் உலகத்தரம் வாய்ந்த வெற்றிகரமான அணியாக மாற்றினார். அவரது தலைமையில் உலக கோப்பையை வெல்லவில்லை என்றாலும் வெளிநாடுகளில் வெற்றிகளை பெறும் யுக்தியை இந்தியா கற்றது.

சொல்லப்போனால் அவர் உருவாக்கிய வீரர்களை வைத்து தான் 2007 மற்றும் 2011 ஆகிய வருடங்களில் எம்எஸ் தோனி தலைமையில் இந்தியா அடுத்தடுத்த உலக கோப்பைகளை வென்றது. அப்படிப்பட்ட மகத்தான கேப்டன்களில் முக்கியமானவராக போற்றப்படும் அவர் கடந்த 2008இல் ஓய்வு பெற்று சில வருடங்கள் ஐபிஎல் தொடரில் விளையாடி மொத்தமாக விடைபெற்றார். அதன்பின் நேரடி கிரிக்கெட் போட்டிகளுக்கு வர்ணனையாளராக செயல்பட்ட அவர் கடந்த 2019இல் நடந்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் பதவிக்கு போட்டியின்றி அனைவரின் ஆதரவுடன் தேர்வு செய்யப்பட்டார்.

தனது தலைமை பண்பால் இந்தியாவை வெற்றிகரமான அணியாக மாற்றியதை போலவே பிசிசிஐ தலைவராக பொறுப்பேற்றதும் அதுவரை யோசித்துக் கொண்டிருந்த இந்தியாவை வரலாற்றில் முதல் முறையாக பகலிரவு டெஸ்ட் போட்டியில் வங்கதேசத்துக்கு எதிராக ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் விளையாடுவதற்கான ஏற்பாடுகளை செய்தார். அத்துடன் உள்ளூர் கிரிக்கெட்டில் அடையாளம் காணப்படாமல் வருடம் தோறும் விளையாடி வரும் கிரிக்கெட் வீரர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் சம்பள உயர்வுக்கான கையெழுத்தையும் போட்டார்.

அப்படி ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் மிகச் சிறந்த தலைவராக செயல்பட்டு வரும் அவர் கடந்த 2021இல் விராட் கோலி ஒருநாள் கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டதில் சர்ச்சைக்குள்ளானர். இருப்பினும் சுமாரான ஃபார்மில் தவிக்கும் போது அவருக்கு முழு ஆதரவையும் கொடுத்துள்ள அவர் அணி நிர்வாகத்தின் நல்ல தலைவராகவே செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில் வரும் 2024 – 2027 வரையிலான காலகட்டத்தில் நடைபெறும் மகளிர் உலக கோப்பைகளை நடத்தும் உரிமங்களை நிர்ணயிக்க இங்கிலாந்தின் பர்மிங்ஹாம் நகரில் நேற்று ஐசிசி உயர்மட்ட குழு கூடியது. அதில் 2024 டி20 மகளிர் உலகக் கோப்பையை வங்கதேசத்திலும் 2025 மகளிர் 50 ஓவர் உலகக் கோப்பையை இந்தியாவிலும் 2026 டி20 உலகக் கோப்பையை இங்கிலாந்திலும் 2027 மகளிர் சாம்பியன்ஸ் டிராபியை இலங்கையிலும் நடத்த முடிவெடுக்கப்பட்டது.

அதேபோல் ஐசிசியின் தற்போதைய தலைவர் ஜார்ஜ் பார்க்ளே பதவிக்காலம் இந்த வருடத்துடன் நிறைவு பெறுகிறது. எனவே அடுத்த ஐசிசி தலைவரை தேர்ந்தெடுக்கும் தேர்தலை வரும் நவம்பரில் நடத்துவதற்கும் இந்த கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. டிசம்பர் 1, 2022 முதல் நவம்பர் 30 2024 வரையிலான 2 வருட கால கட்டத்திற்கு தலைவராக செயல்படுபவரை தீர்மானக்க நடத்தப்படும் அந்த தேர்தலில் சவுரவ் கங்குலி உட்பட உலகின் அனைத்து நாடுகளைச் சேர்ந்த முன்னணி நிர்வாகிகள் போட்டி போட உள்ளதாக தெரியவருகிறது.

அதை தேர்ந்தெடுக்க 16 நாடுகளை சேர்ந்த உறுப்பினர்கள் தங்களது ஓட்டுகளை பதிவு செய்ய உள்ளார்கள். முந்தைய தேர்தல்களில் 3-1 என்பதன் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட தலைவர் பதவி இம்முறை 51% ஓட்டுகளை பெற்றால் போதும் என்ற புதிய விதிமுறையாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அந்த நிலைமையில் எப்போதுமே பிசிசிஐக்கு இதர கிரிக்கெட் வாரிய உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதால் ஐசிசியின் அடுத்த தலைவராக சௌரவ் கங்குலி தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இருப்பினும் ஏற்கனவே பிசிசிஐ தலைவராக கங்குலியும் செயலாளராக ஜெய் ஷா ஆகியோர் 2 வருடத்தை தாண்டி பணியாற்றி வருவதால் அது சம்பந்தமான வழக்கு இந்திய உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அதன் இறுதி தீர்ப்பு வரும் வாரங்களில் வெளியாகும் நிலையில் அதை பொருத்தே ஐசிசி தேர்தலில் கங்குலி பங்கேற்க உள்ளார். ஒருவேளை அந்தத் தேர்தலில் அவர் பங்கேற்றால் வெற்றி பெறுவது நிச்சயம் என்றும் தெரிய வருகிறது.

இது போக இந்த கூட்டத்தில் ஐசிசி ஆடவர் கிரிக்கெட் கமிட்டியில் இந்திய ஜாம்பவான் விவிஎஸ் லக்ஷ்மன் மற்றும் நியூசிலாந்து ஜாம்பவான் டேனியல் வெட்டோரி ஆகியோர் புதிய உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ளார். அத்துடன் கம்போடியா, உஸ்பெகிஸ்தான், கோட்டி இவொரிஸ் ஆகிய 3 புதிய நாடுகள் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ளன. இதன் வாயிலாக தற்போது 108 நாடுகளில் கிரிக்கெட் அங்கீகரிக்க பட்டுள்ளதாக ஐசிசி அறிவித்துள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை