சர்ஃப்ராஸ் கானை தேர்வு செய்யாதது ஏற்புடையதல்ல - சவுரவ் கங்குலி!

Updated: Thu, Jun 29 2023 18:45 IST
Sourav Ganguly reacts to Sarfaraz Khan's repeated snubs! (Image Source: Google)

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு தேர்வு செய்யப்பட்ட இந்திய அணியில் இளம் வீரர்களான யஷஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட் உள்ளிட்டோருக்கு இடம் கிடைத்தது. ஆனால் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் கடந்த 3 ஆண்டுகளாக சிறப்பாக விளையாடிவரும் சர்ஃப்ராஸ் கானுக்கு இடம் கொடுக்கப்படவில்லை. அதேபோல் 5 முதல் 6 ஆண்டுகளாக பெங்கால் அணிக்காக சிறப்பாக விளையாடும் அபிமன்யூ ஈஸ்வரனும் தேர்வு செய்யப்படவில்லை.

இன்னும் சொல்லப்போனால் சர்ஃப்ராஸ் கான் மற்றும் அபிமன்யூ ஈஸ்வரன் ஆகியோர் தேர்வு செய்யப்படாததற்கான காரணத்தை கூட பிசிசிஐ முறையாக தெரிவிக்கவில்லை. இதனால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் பிசிசிஐ மற்றும் தேர்வுக் குழு மீது கடுமையான விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர். இந்த விவகாரம் குறித்து பிசிசிஐ முன்னாள் தலைவரும், கேப்டனுமான சவுரவ் கங்குலி கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், “ரஞ்சி கோப்பை, இராணி கோப்பை மற்றும் துலீப் டிராபி என்று யஷஸ்வி ஜெய்ஷ்வால் ஏராளமான ரன்களை குவித்துள்ளார். அதன் காரணமாக அவர் இந்திய டெஸ்ட் அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆனால் சர்ஃப்ராஸ் கான் தேர்வு செய்யப்படாதது வருத்தம் அளிக்கிறது. கடந்த 3 ஆண்டுகளாக அவர் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளாசி இருக்கும் ரன்களுக்காகவே அவர் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும்.

அதேதான் அபிமன்யூ ஈஸ்வரனுக்கும் நடந்திருக்கிறது. ஏனென்றால் கடந்த 5 ஆண்டுகளாக அபிமன்யூ ஈஸ்வரன் தொடர்ந்து அதிக ரன்களை விளாசி வருகிறார். இவர்கள் இருவருமே இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படாதது ஆச்சரியமாக தான் உள்ளது. ஆனால் அவர்கள் இருவருக்கும் வருங்காலத்தில் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.

என்னை பொறுத்தவரை யஷஸ்வி ஜெய்ஸ்வால் சரியான தேர்வு தான். சர்ஃப்ராஸ் கான் பேட்டிங்கில் பிரச்சனை இருக்கிறது என்று சொல்வது ஏற்புடையதல்ல. அப்படி அவருக்கு வேகப்பந்துவீச்சாளர்களை எதிர்கொள்வதில் பிரச்சனை இருந்தால், இந்தியா முழுக்க அனைத்து மைதானங்களிலும் சர்ஃப்ராஸ் கானால் ரன்கள் சேர்த்திருக்க முடியாது” என்று தெரிவித்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை