டெல்லி கேப்பிட்டல்ஸில் இணையும் சௌரவ் கங்குலி?
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன், அதிரடி வீரர் சௌரவ் கங்குலி. கடந்த 2019 ஆம் ஆண்டில் பிசிசிஐ தலைவராக கங்குலி பொறுப்பேற்றார். அந்த ஆண்டுக்கு முன்னதாக ஐபிஎல் சீசனில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் இயக்குநராக இருந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்துடன் பிசிசிஐ பதவிக்காலம் முடிந்த நிலையில், பிசிசிஐ-யின் புதிய தலைவராக ரோஜர் பின்னி நியமிக்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக கங்குலி தற்போது ஐஎபில் பக்கம் திரும்பியுள்ளார். அதாவது மீண்டும் டெல்லி அணியின் இயக்குநராக அவர் பொறுப்பேற்க இருப்பதாக தகவல் வந்துள்ளது.
வரும் 2023 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் சீசனில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் இயக்குநராக கங்குலி பொறுப்பேற்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக கங்குலியுடன் பேச்சுவார்த்தை நடந்து முடிந்துள்ளது. கடந்த ஐபிஎல் சீசன்களில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் பணியாற்றியபோது அவர் அணிக்கு தேவையான பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் வரலாற்றில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக சௌரவ் கங்குலி செயல்பட்டார். கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் விளையாடினார். அதன் பிறகு 2011, 2012 ஆம் ஆண்டுகளில் புனே வாரியர்ஸ் அணியில் இடம் பெற்று விளையாடினார்.
ஐபிஎல்லில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் இயக்குநராக இருப்பது மட்டுமின்றி துபாய் கேப்பிடல்ஸ்-ன் ஐஎல்டி20 மற்றும் எஸ்ஏடி20 லீக்கின் பிரிட்டோரியா கேபிடல்ஸ் ஆகிய அணிகளின் செயல்பாட்டையும் அவர் மேற்பார்வையிடுவார் என்று சொல்லப்படுகிறது.
டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டனான ரிஷப் பந்த் கார் விபத்தில் பலத்த காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரால் ஐபிஎல் சீசனில் கலந்து கொள்ள முடியாது என்று தெரிகிறது. ஆகையால், அவருக்குப் பதிலாக டேவிட் வார்னர், பிரித்வி ஷா அல்லது மணீஷ் பாண்டே ஆகியோரில் யாரேனும் ஒருவர் கேப்டனாக செயல்படுவார்கள் என்று தெரிகிறது.