SA vs BAN, 2nd Test: தென் ஆப்பிரிக்கா 453-ல் ஆல் அவுட்; சறுக்கலில் வங்கதேசம்!
தென் ஆப்பிரிக்கா - வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி போர்ட் எலிசபெத்தில் நடைபெற்றுவருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து களமிறங்கியது.
அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 278 ரன்கள் அடித்துள்ளது. அந்த அணியில் கெய்ல் வெர்ரெய்ன் 10 ரன்களுடனும், வியான் முல்டர் ரன் ஏதுமின்றியும் களத்தில் உள்ளனர்.
வங்கதேச அணி தரப்பில் தைஜுல் இஸ்லாம் 3 விக்கெட்டுகளையும், கலீத் அஹ்மத் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளனர்.
இதையடுத்து இன்று இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த அந்த அணியில் வெர்ரெய்ன் 22 ரன்களிலும், முல்டர் 33 ரன்களிலும் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினர்.
அடுத்து களமிறங்கிய கேஷவ் மஹாராத் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்தார். இப்போட்டியில் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட மஹாராஜ் 84 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணி 136.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 453 ரன்களைச் சேர்த்தது. வங்கதேச தரப்பில் தைஜுல் இஸ்லாம் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய வங்கதேச அணியில் மஹ்முதுல் ஹசன் ஜாய் ரன் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார்.
பின்னர் ஜோடி சேர்ந்த தமிம் இக்பால் - நஜ்முல் ஹொசைன் சாண்டோ சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். அதன்பின் 33 ரன்களில் ஹொசைன் சாண்டோ ஆட்டமிழக்க, மறுமுனையிலிருந்த தமிம் இக்பால் 47 ரன்களில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
அடுத்து வந்த மொமினுல் ஹக் 6, லிட்டன் தாஸ் 11 என விக்கெட்டை இழந்து நடையைக் கட்டினர். இதனால் இரண்டாம் நாள் ஆட்டமுடிவில் வங்கதேச அணி 5 விக்கெட்டுகளை இழந்து 135 ரன்களை மட்டுமே எடுத்துள்ளது.
வங்கதேச தரப்பில் முஷ்பிக்கூர் ரஹிம் 30 ரன்களுடனும், யசிர் அலி 8 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். தென் ஆப்பிரிக்க தரப்பில் வியான் முல்டர் 3 விக்கெட்டுகளையும், ஒலிவியர் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.