எங்களுடைய கனவு சிதைந்துவிட்டது - தோல்வி குறித்து மார்க்ரம் வருத்தம்!

Updated: Sun, Jun 30 2024 14:53 IST
எங்களுடைய கனவு சிதைந்துவிட்டது - தோல்வி குறித்து மார்க்ரம் வருத்தம்! (Image Source: Google)

 

பார்படாஸில் உள்ள கென்ஸிங்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது . இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியானது விராட் கோலியின் அரைசதத்தின் மூலமும், அக்ஸர் படேலின் பொறுப்பான ஆட்டத்தின் மூலமாகவும் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 176 ரன்களைச் சேர்த்தது. 

இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக விராட் கோலி 6 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் என 72 ரன்களையும், அக்ஸர் படேல் ஒரு பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 47 ரன்களையும் சேர்த்தனர். தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் அதிகபட்சமாக கேசவ் மஹாராஜ் மற்றும் ஆன்ரிச் நோர்ட்ஜே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடி வரும் தென் ஆப்பிரிக்க அணியில் தொடக்க வீரர் ரீஸா ஹென்றிக்ஸ் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார். 

அதன்பின் குயின்டன் டி காக் 39 ரன்களிலும், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 31 ரன்களையும், ஹென்ரிச் கிளாசென் 52 ரன்களுக்கும், டேவிட் மில்லர் 21 ரன்களுக்கு என விக்கெட்டுகளை இழந்த காரணத்தால் தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதன்மூலம் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தியதுடன், இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தையும் வென்று அசத்தியுள்ளது. 

இந்நிலையில் இப்போட்டியில் அதிர்ச்சி தோல்வியைத் தழுவியது குறித்து பேசிய தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் ஐடன் மார்க்ரம், “வெளிப்படையாக கூறவேண்டும் எனில் எங்களுடைய கனவு சிதைந்துவிட்டது. இதைப் பற்றி நாம் சிந்திக்க சிறிது நேரம் எடுக்கும். இத்தொடரில் நாங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளோம். ஆனால் தற்போதைய தோல்வியானது எங்களுக்கு மிகவும் வேதனை அளிக்கிறது.

எங்களது அணி வீரர்களையும், அணியில் உள்ள மற்றவர்களையும் நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன். நாங்கள் நன்றாக பந்து வீசினோம், ஆடுகளம் அவர்களுக்கு அதிக வேலை கொடுக்கவில்லை. மேலும் இந்த மைதானத்தில் இந்த இலக்கை துரத்தக்கூடிய ஒன்றாகவே நாங்கள் நினைத்தோம். இது ஒரு சிறந்த கிரிக்கெட் விளையாட்டாக இருந்தது, கடைசி வரை போராடிய எனது அணி வீரர்களை நினைத்து மகிழ்ச்சியடைகிறேன். இப்போட்டியில் வெற்றிபெறாதது கடினமாக இருந்தாலும், எங்கள் வீரர்களை நினைத்து பெருமைப்படுகிறேன்.

இத்தொடரில் நாங்கள் விளையாடிய பல ஆட்டங்களுக்கு கடைசி பந்து வரை அது முடிவடையவில்லை என்பதை நாங்கள் பார்த்திருக்கிறோம். இறுதியில் அது விரைவாக மாறியது. ஆனால் இப்போட்டியில் நாங்கள் இலக்கை எட்டக்கூடிய நிலையில் இருந்தோம். இன்னும் சற்று முயற்சித்திருந்தால் நாங்கள் இப்போட்டியை வென்றிருக்கலாம் என்பது எங்களுக்குத் தெரியும். இதன்மூலம் நாங்கள் தென் ஆப்பிரிக்க மக்களிடம் உத்தரவாதம் அளிக்கக்கூடிய ஒரு விஷயம் ஒன்றுள்ளது.

Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy

அது என்னவென்றால், நாங்கள் போட்டித்தன்மையுள்ளவர்கள் என்பதை நிருப்பித்துள்ளோம். அதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். இத் தோல்வியில் இருந்து நாம் கற்றுக்கொண்டதை பயன்படுத்தி இனி வரும் தொடர்களில் சிறப்பாக செயல்படுவோம் என்று நம்புகிறோம். இது எப்பொழுதும் நமக்கு பெருமைக்குரிய நாளாக இருக்கும். நம்பிக்கையுடன் முன்னோக்கி நகரும் எங்களால் அந்த முதல் வெற்றியைப் பெற முடியும்” என்று தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை