ஆஃப்கானிஸ்தான் அணியானது தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளௌயாடி வருகிறது. இத்தொடரில் நடைபெற்று முடிந்த முதலிரண்டு ஒருநாள் போட்டிகளிலும் ஆஃப்கானிஸ்தான் அணியானது வெற்றிபெற்று அசத்தியதுடன், 2-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் கைப்பற்றி புதிய வரலாறு படைத்தது.
இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும ஒருநாள் போட்டியானது நேற்று ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து தென் ஆப்பிரிக்க அணியை பந்துவீச அழைத்தது. அதன்படி களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணிக்கு தொடக்க வீர்ர் ரஹ்மனுல்லா குர்பாஸ் அதிரடியான தொடக்கத்தை வழங்கினார். ஆனால் மறுபக்கம் களமிறங்கிய மற்றொரு தொடக்க வீரர் அப்துல் மாலிக் 9 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார்.
அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ரஹ்மத் ஷா ஒரு ரன்னில் ஆட்டமிழக்க, பின்னர் களமிறங்கிய கேப்டன் ஹஸ்மதுல்லா ஷாஹிதி 10 ரன்களுக்கும், அதிரடி வீரர் அஸ்மதுல்லா ஒமர்ஸாய் 2 ரன்களிலும், இக்ரம் அலிகில் 4 ரன்களிலும், முகமது நபி 5 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். அதேசமயம் மறுபக்கம் தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த ரஹ்மனுல்லா குர்பாஸ் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். மேற்கொண்டு சதமடிப்பார் என எதிர்பார்க்கபட்ட குர்பாஸ் 7 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 89 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார்.
இதனைத்தொடர்ந்து களமிறங்கிய வீரர்களில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த அல்லா கசான்ஃபர் 2 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 31 ரன்களைச் சேர்த்தார். ஆனால் மறுபக்கம் விளையாடிய வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இதனால் ஆஃப்கானிஸ்தான் அணியானது 34 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததுடன் 169 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் லுங்கி இங்கிடி, பீட்டர் மற்றும் ஆண்டில் பெஹ்லுக்வாயோ ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர்.
அதன்பின் எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு வழக்கம்போல் கேப்டன் டெம்பா பவுமா - டோனி டி ஸோர்ஸி இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 40 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் கேப்டன் டெம்பா பவுமா 22 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரரான டோனி டி ஸோர்ஸியும் 26 ரன்களுடன் விக்கெட்டை இழக்க, அடுத்துவந்த ரீஸா ஹென்றிக்ஸும் 18 ரன்களுடன் நடையைக் கட்டினார். இதனால் தென் ஆப்பிரிக்க அணி 80 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
Also Read: Funding To Save Test Cricket
பின்னர் ஜோடி சேர்ந்த ஐடன் மார்க்ரம் மற்றும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் இணை பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் ஐடன் மார்க்ரம் தனது அரைசதத்தைப் பதிவுசெய்ததுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 69 ரன்களையும், அவருக்கு துணையாக விளையாடிய டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 26 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணி 33 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆஃப்கானை வீழ்த்தி ஆறுதல் வெற்றியைப் பதிவுசெய்தது. மேலும் இப்போட்டி மற்றும் தொடர் நாயகன் விருதை ரஹ்மனுல்லா குர்பாஸ் கைப்பற்றினார்.