உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025: பின்னடைவை சந்தித்த தென் ஆப்பிரிக்கா!
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் 2023-25ஆம் ஆண்டு சீசனுக்கான இறுதிப்போட்டிக்கு தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் முன்னேறியுள்ளன. இவ்விரு அணிகளுக்கு இடையேயான இந்த இறுதிப்போட்டி எதிர்வரும் ஜூன் மாதம் 11ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதில் நடப்பு சாம்பியன் எனும் அந்தஸ்துடன் களமிறங்கும் ஆஸ்திரேலிய அணியானது பட்டத்தை தக்க வைக்கும் முயற்சியில் இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளது. அதேசமயம் இதுநாள் வரை ஐசிசி தொடர்களில் சாம்பியன் பட்டத்தை வெல்ல முடியாமல் தடுமாறி வரும் தென் ஆப்பிரிக்க அணியானது, இம்முறை இந்த போட்டியில் வெற்றிபெறுவதுடன் வரலாற்றை மாற்றி எழுதும் முனைப்பிலும் இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளது. இதனால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் இப்போட்டிக்கு இன்னும் இரண்டு மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் தென் ஆப்பிரிக்க அணிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அதன்படி தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமாவுக்கு முழங்கையில் காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏனெனில் தென் ஆப்பிரிக்காவின் உள்ளூர் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் லையன்ஸ் அணிக்காக பவுமா விளையாடுவதாக இருந்தது.
இவ்விரு அணிகாளுக்கு இடையேயான இப்போட்டியானது ஜொஹன்னஸ்பர்க்கில் நடைபெறும் நிலையில், பவுமா காயம் காரணமாக அங்கு வந்தடையவில்லை என்று கூறப்படுகிறது. மேற்கொண்டு பவுமாவின் காயம் தீவிரமடைந்துள்ளதன் காரணமாக அவர் இப்போட்டியில் விளையாட மாட்டார் என்றும் அறிவிக்கப்பட்டது. மேலும் பவுமா ஏற்கெனவே இதே காயம் காரணமாக கடந்த 2022ஆம் ஆண்டு இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இருந்தும் விலகினார்.
Also Read: Funding To Save Test Cricket
மேற்கொண்டு கடந்த ஆண்டும் முழங்கை காரணமாக வங்கதேச டெஸ்ட் தொடரையும் தவறவிட்டிருந்தார். இந்நிலையில் தற்போது அவர் முழுங்கையில் காயத்தை சந்தித்துள்ளதால், எதிர்வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாடுவாரா எந்த கேள்விகள் எழுந்துள்ளன. இருப்பினும் இப்போட்டிக்கு இன்னும் 8 வாரங்கள் உள்ளதால், அதற்குள் பவுமா முழு உடறதகுதியை எட்டுவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.