இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் எம்எஸ் தோனி உலகிலேயே 3 விதமான ஐசிசி வெள்ளைப்பந்து உலகக் கோப்பைகளை வென்ற ஒரே கேப்டனாக சாதனை படைத்து இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்துள்ளார். மேலும் விக்கெட் கீப்பராக புதிய பரிணாமத்தை ஏற்படுத்தும் அளவுக்கு அசத்திய அவர் உலகிலேயே அதிக ஸ்டம்ப்பிங் செய்தவராக உலக சாதனை படைத்து இளம் வீரர்களுக்கு முன்னோடியாக திகழ்கிறார்.

Advertisement

அதே போல மிடில் ஆர்டரில் பெரும்பாலான போட்டிகளில் நங்கூரமாக நின்று எதிரணிகளுக்கு சவாலை கொடுத்து கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடி வெற்றிகளை பெற்றுக் கொடுத்த அவர் சிறந்த ஃபினிஷராகவும் கொண்டாடப்படுகிறார். அது போக ரோஹித் சர்மா, விராட் கோலி போன்ற தற்போதைய முக்கிய வீரர்கள் உருவாவதற்கு அப்போதே சீனியர்களை கழற்றி விட்டு வாய்ப்பு கொடுத்து வளர்த்த அவர் இந்திய கிரிக்கெட்டின் வருங்காலத்தை சிறப்பாக கட்டமைத்து விடை பெற்றார் என்றே சொல்லலாம்.

இந்நிலையில் ஆரம்ப காலங்களில் டாப் ஆர்டரில் விளையாடிய தோனி கேப்டனாக பொறுப்பேற்றதும் அணியின் நலனுக்காக தம்முடைய இடத்தை இளம் வீரர்களுக்கு கொடுத்ததாக சமீபத்தில் கௌதம் கம்பீர் தெரிவித்தார். ஒருவேளை தொடர்ந்து டாப் ஆர்டரில் விளையாடியிருந்தால் இந்நேரம் சொந்த பெயரில் நிறைய சாதனைகள் படைத்திருப்பார் என்று தெரிவித்த அவர், இந்தியாவின் வெற்றிக்காகவும் உலகக் கோப்பைகளை வெல்வதற்காகவும் தோனி அதை தியாகம் செய்ததாக பாராட்டியிருந்தார்.

இந்நிலையில் தோனி தன்னுடைய இடத்தை தியாகமெல்லாம் செய்யவில்லை என்று கம்பீர் கருத்து பற்றி ஸ்ரீசாந்த் கூறியுள்ளார். ஆனால் அதையும் தாண்டி அணியின் நலனுக்காக வருங்காலத்தை கருத்தில் கொண்டு தோனி தம்முடைய இடத்தில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்து வளர்த்ததாக முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர், “கேப்டன்சி பொறுப்பு காரணமாக தோனி தனது பேட்டிங்கையும், நம்பர் 3 வரிசையையும் தியாகம் செய்ததாக கம்பீர் கூறி இருக்கிறார். ஆனால் தோனி எந்த தியாகத்தையும் செய்யவில்லை. அவரை பொறுத்தவரை அதிக ரன்கள் சேர்ப்பதை விடவும், அதிக வெற்றிகளை குவிக்க வேண்டும் என்பது தான் ஆசையாக இருந்தது. 

எப்போதெல்லாம் அணிக்கு தேவையோ, அப்போதெல்லாம் ஃபினிஷிங் களமிறங்கி வெற்றிபெற வைத்தார். அவரால் ஒவ்வொரு வீரரிடம் இருந்து சிறந்த ஆட்டத்தை வெளிக் கொண்டு வர முடிந்தது. ஒவ்வொரு வீரரின் திறமைக்கேற்ப பேட்டிங் பொசிஷனை அளித்தார். தோனியை பொறுத்தவரை அணி தான் முதலில் இருக்கும். அதன்பின் தான் சொந்த சாதனையை பார்ப்பார்” என்று தெரிவித்துள்ளார்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News