சஞ்சு சாம்சன் ஜாம்பவான்கள் சொல்வதை கேட்டதே இல்லை - ஸ்ரீசாந்த்!

Updated: Thu, Sep 21 2023 22:24 IST
சஞ்சு சாம்சன் ஜாம்பவான்கள் சொல்வதை கேட்டதே இல்லை - ஸ்ரீசாந்த்! (Image Source: Google)

இந்திய அணிக்காக குறைந்த போட்டிகளிலேயே விளையாடி இருந்தாலும், சஞ்சு சாம்சனுக்காக கவலைப்படாத கிரிக்கெட் வீரர்களே இல்லை என்று சொல்லலாம். இந்திய அணிக்காக விளையாடவில்லை என்றாலும், ஐபிஎல் தொடர் மூலமாக கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டவர் சஞ்சு சாம்சன். சென்னை, கேரளா, ராஜஸ்தான், டெல்லி, பெங்களூரு என்று இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் அவருக்கு அதிகளவில் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

சிறிய வயதிலேயே ஐபிஎல் விளையாடியதன் விளைவால், இளம் வயதிலேயே ராஜஸ்தான் அணியின் கேப்டனாகவும் செயல்பட்டு வருகிறார். இதன் காரணமாக ராஜஸ்தான் அணிக்காக நீண்ட காலம் விளையாடினால், ஐபிஎல் தொடரில் ஏராளமான சாதனைகளை படைப்பார் என்று பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ராஜஸ்தான் அணிக்கு சஞ்சு சாம்சன் எப்படி கொண்டு வரப்பட்டார் என்ற விவரத்தை ஸ்ரீசாந்த் கூறியுள்ளார்.

இதுகுறித்து பேசிய இந்திய முன்னாள் வீரர் ஸ்ரீசாந்தம், “நானும் சஞ்சு சாம்சனும் ஒரே மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். 19 வயதில் சஞ்சு சாம்சனை ராஜஸ்தான் அணியின் கேப்டனாக இருந்த ராகுல் டிராவிட்டிடம் அழைத்து சென்றேன். அப்போது ராகுல் டிராவிட்டிடம், உள்ளூர் கிரிக்கெட்டில் என் பந்துவீச்சில் 6 சிக்சர்களை விளாசிய வீரர் இவர் தான் என்று சஞ்சு சாம்சனை அறிமுகம் செய்தேன்.

இதனை கேட்ட ராகுல் டிராவிட், என்னிடம் என்ன வேண்டுமென்றாலும் சொல்லலாம் ஸ்ரீசாந்த். ஆனால் இவ்வளவு பொய் சொல்லக் கூடாது என்று என்னை பார்த்து கிண்டல் செய்தார். சஞ்சு சாம்சனுக்காக நாம் அவரிடம் பொய் சொல்லி மாட்டிக் கொண்டேன். பேட்டிங் ட்ரெயல்ஸ்-க்காக சஞ்சு சாம்சன் வருவதற்காக பணத்தையும் நான்தான் பார்த்தேன்.

இதன்பின் ராகுல் டிராவிட் சஞ்சு சாம்சனின் பேட்டிங்கை பார்த்துக் கொண்டிருந்தார். சொல்லப் போனால் சஞ்சு சாம்சன் அவரின் திறமையை முழுமையாக வெளிப்படுத்தவில்லை. ஆனாலும் ராகுல் டிராவிட் சஞ்சு சாம்சனை வேறு அணிக்கும் ட்ரெயல்ஸ் அனுப்ப வேண்டாம். அவரை ராஜஸ்தான் அணிக்காக ஒப்பந்தம் செய்யலாம் என்று என்னிடம் கூறினார்.

அவருக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்குமா என்பது தெரியாது. ஆனால் அவரை ராஜஸ்தான் அணிக்காக ஒப்பந்தம் செய்கிறோம் என்று கூறினார். சஞ்சு சாம்சன் அணிக்கு வந்த போது பலரும் ஏன் சிறியவர்க்ளை அணிக்குள் கொண்டு வருகிறாய் என்று சீனியர்கள் கேட்டனர். ஆனால் சாதாரண வீரனாக தொடங்கிய சஞ்சு சாம்சனின் பயணம் இன்று கேப்டனாக உயரும் அளவிற்கு முன்னேறி இருக்கிறார்" என்று கூறினார். 

இதையடுத்து சஞ்சு சாம்சன் உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்படாதது குறித்து பேசிய அவர், “ஒருநாள் கிரிக்கெட்டில் நல்ல பேட்டிங் சராசரியை வைத்திருந்தாலும், ஆஸ்திரேலிய ஒருநாள் தொடர் மற்றும் உலகக்கோப்பை தொடருக்கு தேர்வு செய்யப்படாதது சரியான முடிவு என்றே நினைக்கிறேன். ஏனென்றால் சஞ்சு சாம்சனை பற்றி பல்வேறு ஜாம்பவான் வீரர்கள் பெருமையாகவும், பாராட்டவும் செய்திருக்கிறார்கள். 

ஆனால் சஞ்சு சாம்சன் ஜாம்பவான்கள் சொல்வதை காது கொடுத்து கேட்டதே இல்லை. ஒவ்வொரு முறையில் ஆடுகளத்திற்கும், பிட்ச்சிற்கும் மதிப்பு கொடுக்க வேண்டும் என்று சொல்வோம். ஆனால் சஞ்சு சாம்சன் ஒருநாளும் கேட்டதே இல்லை. அந்த குணத்தை சஞ்சு சாம்சன் மாற்றிக் கொள்ள வேண்டும். எப்போதும் சில நிமிடங்கள் களத்தில் இருக்க அறிவுறுத்துவோம். என்னை பொறுத்தவரை சஞ்சு சாம்சனுக்கு போதுமான வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது” என்று கூறினார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை