இந்திய மகளிர் அணி இலங்கைக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 டி20, 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. ஜூன் 23 அன்று டி20 தொடங்குகிறது. அதன்பிறகு நடைபெறும் ஒருநாள் தொடர், ஜூலை 7 அன்று முடிவடைகிறது.
இந்நிலையில் இத்தொடருக்கான இலங்கை மகளிர் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியை சமாரி அத்தபத்து வழிநடத்துகிறார்.
இலங்கை அணி: சாமரி அதபத்து (கேப்டன்), ஹாசினி பெரேரா, கவிஷா தில்ஹாரி, நிலக்ஷி டி சில்வா, அனுஷ்கா சஞ்சீவனி, ஓஷதி ரணசிங்க, சுகந்திகா குமாரி,இனோகா ரணவீர, அச்சினி குலசூரிய, ஹர்ஷித சமரவிக்ரம, விஷ்மி குணரத்ன, மல்ஷா ஷெஹானி, அமா காஞ்சனா, உதேஷிகா பிரபோதனி, ரஷ்மி டி சில்வா, ஹன்சிமா கருணாரத்ன, கௌஷானி நுத்யங்கனா, சத்திய சந்தீபனி, தாரிகா செவ்வந்தி.
இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி இரு அணிகளும் விளையாடும் டி20 மற்றும் ஒருநாள் தொடர்கள் எந்தத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் என்பது யாருக்கும் தெரியாது.
இதுபற்றி இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஆஷ்லி டி சில்வா ஒரு பேட்டியில் கூறியதாவது, “தொலைக்காட்சி ஒளிபரப்பு பற்றி எங்களுக்கு உறுதியாகத் தெரியவில்லை. எனினும் யூடியூப் தளத்தில் நேரலையாக ஒளிபரப்ப ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன” என்றார்.
இந்தியாவில் இலங்கை கிரிக்கெட் ஆட்டங்களை ஒளிபரப்பும் சோனி நிறுவனம், இந்தத் தொடரை ஒளிபரப்புவது குறித்து இதுவரை எவ்விதத் தகவலும் தெரிவிக்கவில்லை. இதனால் மகளிர் கிரிக்கெட்டுக்கு பிசிசிஐ முக்கியத்துவம் அளிக்கவில்லை எனப் பலரும் சமூகவலைத்தளங்களில் விமர்சனம் செய்துள்ளார்கள்.
டி20 தொடர் ஆரம்பிக்க இன்னும் இரு நாள்களே உள்ள நிலையில் பிசிசிஐ ஏதாவது முயற்சி செய்து இந்திய மகளிர் அணி விளையாடும் ஆட்டங்களைத் தொலைக்காட்சியில் காண்பதற்கான ஏற்பாடுகளைச் செய்யவேண்டும் என்பதே பலருடைய கோரிக்கையாக உள்ளது.