NZ vs SL, 3rd ODI: நியூசிலாந்தை வீழ்த்தி ஆறுதல் வெற்றியைப் பெற்றது இலங்கை!
இலங்கை அணி தற்போது நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதலிரண்டு ஒருநாள் போட்டிகளிலும் நியூசிலாந்து அணி வெற்றிபெற்று 2-0 என்ற கணக்கில் தொடரை வென்ற நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று (ஜனவரி11) ஆக்லாந்தில் உள்ள ஈடன் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் சரித் அசலங்கா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து நியூசிலாந்து அணியை பந்துவீச அழைத்தார். அதன்படி களமிறங்கிய இலங்கை அணிக்கு பதும் நிஷங்கா மற்றும் அவிஷ்கா ஃபெர்னாண்டோ இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்ததனர். இப்போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய பதும் நிஷங்கா அரைசதம் கடந்த நிலையில், தசைப்பிடிப்பு காரணமாக க்ளத்தியில் இருந்து பாதியிலேயே வெளியேறினார்.
அதன்பின் அவிஷ்காவுடன் இணைந்த குசால் மெண்டிஸும் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இதில் அவிஷ்கா ஃபெர்னாண்டோ 17 ரன்களில் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அரைசதம் கடந்திருந்த குசால் மெண்டிஸும் 54 ரன்களுடன் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய கேப்டன் சரித் அசலங்கா ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்த நிலையில், அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கமிந்து மெண்டிஸும் 46 ரன்களில் விக்கெட்டை இழந்தார். பின் காயத்தை பொறுட்படுத்தாமல் மீண்டும் களமிறங்கிய பதும் நிஷங்கா 6 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 66 ரன்களை எடுத்திருந்த நிலையில் சான்ட்னர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
இதனையடுத்து ஜனித் லியானகே ஒருபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், மறுபக்கம் களமிறங்கிய சமிந்து விக்ரமசிங்கே 19 ரன்களுக்கும், வநிந்து ஹசரங்கா 15 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். இறுதியில் ஜனித் லியானகேவும் 3 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 53 ரன்களைச் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார். இதனால் இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 290 ரன்களைச் சேர்த்தது. நியூசிலாந்து அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய மேட் ஹென்றி 4 விக்கெட்டுகளையும், மிட்செல் சான்ட்னர் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.
அதன்பின் கடின இலக்கை நோக்கி விளையாடிய நியூசிலாந்து அணிக்கு ரச்சின் ரவீந்திரா - வில் யங் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வில் யங் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து ஒரு ரன் மட்டுமே எடுத்த நிலையில் ரச்சின் ரவீந்திராவும் ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய மார்க் சாப்மேன் ஒருபக்கம் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியி இறங்கினார். ஆனால் மறுபக்கம் டேரில் மிட்செஇ, டாம் லேதம், கிளென் பிலீப்ஸ் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் சொற்ப ரன்களில் நடையைக் கட்டினர்.
அடுத்து வந்த மைக்கேல் பிரேஸ்வெல் மற்றும் கேப்டன் மிட்செல் சான்ட்னர் ஆகியோரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, நியூசிலாந்து அணி 77 ரன்களிலேயே 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஒருபக்கம் மளமளவென விக்கெட்டுகள் சரிந்த நிலையிலும் மறுமுனையில் தொடர்ந்து அபாரமாக விளையாடி வந்த மார்க் சாப்மேன் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அவருன் இணைந்து விளையாடிய நாதன் ஸ்மித்தும் விக்கெட்டை இழக்காமல் விளையாடியதன் காரணமாக இருவரது பார்ட்னர்ஷிப்பும் 50 ரன்களைத் தாண்டியது.
Also Read: Funding To Save Test Cricket
பின் 17 ரன்களில் நாதன் ஸ்மித்தும், மேட் ஹென்றி 12 ரன்களிலும் விக்கெட்டை இழக்க, மார்க் சாப்மேன் 10 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 81 ரன்களை எடுத்த கையோடு விக்கெட்டை இழந்தார். இதனால் நியூசிலாந்து அணி 29.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ந்து 150 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இலங்கை தரப்பில் அசிதா ஃபெர்னாண்டோ 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன்மூலம் இலங்கை அணி 140 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி ஆறுதல் வெற்றியைப் பதிவுசெய்தது. இருப்பினும் நியூசிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை வென்றது.