முன்னாள் கேப்டன் கருத்துக்கு பதிலடி கொடுத்த இலங்கை கிரிக்கெட் வாரியம்!
இந்த அணிக்கு ஷிகர் தவான் கேப்டனாகவும், பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ள இந்திய அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள், டி20 தொடரில் விளையாடவுள்ளது. மேலும் இந்த அணிக்கு தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் செயல்படவுள்ளார்.
தவான தலைமையிலான 20 பேர் கொண்ட அணியில், அறிமுக வீரர்களாக தேவ்தத் படிக்கல், ருத்ராஜ் கெயிக்வாட், நிதிஷ் ராணா, கிருஷ்ணப்பா கவுதம், சேட்டன் சக்காரியா, வருண் சக்கரவர்த்தி ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த தொடருக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் சூழலில், இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் அர்ஜுனா ரணதுங்கா, இந்தியா தங்களது ஏ அணியை விளையாட அனுப்பியுள்ளது. இலங்கை கிரிக்கெட் வாரியமும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் அவர்களுடன் விளையாட சம்மதம் தெரிவித்துள்ளதாக கடுமையாக விமர்சித்திருந்தார்.
இந்நிலையில் ரணதுங்காவின் குற்றச்சாட்டுக்கு இலங்கை கிரிக்கெட் வாரியம் பதிலடி கொடுத்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்,“இலங்கை கிரிக்கெட் வாரியம் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்ததை அறிந்தோம். இந்தியாவின் இரண்டாம் தர அணி ஒன்றும் இலங்கைக்கு வரவில்லை. சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள 20 பேர் கொண்ட அணியில், 14 வீரர்கள் ஏற்கனவே இந்தியாவுக்காக சில போட்டிகளில் விளையாடியவர்கள். மேலும் உள்ள 6 வீரர்கள் ஐபிஎல் உள்ளிட்ட போட்டிகளில் தங்களது திறனை வெளிப்படுத்தியுள்ளனர். அதனால் இதனை எப்படி ஏ அணி என்று கூறமுடியும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.