Asian Games 2023: பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது இலங்கை!

Updated: Sun, Sep 24 2023 14:55 IST
Asian Games 2023: பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது இலங்கை! (Image Source: Google)

சீனாவில் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய கிரிக்கெட் வாரியம் ஆண் மற்றும் பெண் கிரிக்கெட் அணிகளை அனுப்பி வைக்கின்றன. ஆசிய விளையாட்டு போட்டியில் மகளிர் கிரிக்கெட் தொடர் டி20 வடிவத்தில் நடத்தப்பட்டு வருகிறது. இதில் இன்று நடைபெற்று முடிந்த முதலாவது அரையிறுதிப்போட்டியில் இந்திய அணி வங்கதேச அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. 

இதையடுத்து இன்று நடைபெற்ற இரண்டாவது அரையிறுதிப்போட்டியில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை.

அணியின் தொடக்க விராங்கனை அமீன் 3 ரன்களுக்கும், ஷவால் சுல்ஃபிகர் 16 ரன்களுக்கும் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய ஒமைமா சொஹைல் 10, முனீபா அலி 13, கேப்டன் நிதா தார் 9, அலியா ரியாஸ் 2, நடாலியா 8, உம் இ ஹனி 9, நஷரா சந்து என அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர்.

இதனால் 20 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் மகளிர் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 75 ரன்களை மட்டுமே எடுத்தது. இலங்கை அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய பிரபோதானி 3 விக்கெட்டுகளையும், கவிஷா தில்ஹாரி 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர்.

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணிக்கு சமாரி அத்தப்பத்து - அனுஷ்க சஞ்சீவனி ஆகியோர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி தொடக்கம் கொடுத்தனர். இதில் அத்தப்பத்து 14 ரன்களுக்கும், அனுஷ்கா சஞ்சீவனி 15 ரன்களுக்கும் என விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். 

அதன்பின் வந்த விஷ்மி குணரத்னே முதல் பந்திலேயே விக்கெட்டை இழக்க, ஹர்ஷிதா சமரவிக்ரமா 23 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். அதன்பின் வந்த நிலாக்‌ஷி டி சில்வா இறுதிவரை ஆட்டமிழக்காமல் 18 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் இலங்கை அணி 16.3 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 6 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது.

இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணி ஆசிய விளையாட்டு போட்டிகளின் இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளது. இதையடுத்து நாளை நடைபெறும் இப்போட்டியில் இலங்கை மகளிர் அணி இந்திய மகளிர் அணியை எதிர்த்து விளையாடவுள்ளது.  

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை