SL vs ZIM, 3rd T20I: ஜிம்பாப்வேவை பந்தாடி தொடரை வென்றது இலங்கை!
இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து வரும் ஜிம்பாப்வே அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதலாவது டி20 போட்டியில் இலங்கை அணி கடைசி பந்தில் போராடி வெற்றிபெற்றது. இதையடுத்து நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் ஜிம்பாப்வே அணி கடைசி ஓவரில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி இலங்கையை வீழ்த்தியதோடு, தொடரையும் சமன் செய்தது.
இந்நிலையில் இலங்கை - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று கொழும்புவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள இலங்கை அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய ஜிம்பாப்வே அணிக்கு கமுன்ஹுகாம்வே - எர்வின் இணை தொடக்கம் கொடுத்தனர்.
இதில் எர்வின் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழக்க, கமுன்ஹுகாம்வே 12 ரன்களில் நடையைக் கட்டினார். அதன்பின் வந்த பிரையன் பென்னெட் 29 ரன்களையும், சீன் வில்லியம்ஸ் 15 ரன்களையும், கேப்டன் சிக்கந்தர் ரஸா 10 ரன்களுக்கும் என விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய வீரர்களும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். இதனால் 14.1 ஓவர்களி ஜிம்பாப்வே அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 82 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இலங்கை தரப்பில் கேப்டன் வநிந்து ஹசரங்கா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணிக்கு பதும் நிஷங்கா - குசால் மெண்டிஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய இருவரும் 64 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர். இதில் 4 பவுண்டரி, ஒரு சிக்சர் என 33 ரன்களை எடுத்திருந்த குசால் மெண்டிஸ் தனது விக்கெட்டை இழந்தார். இதையடுத்து தனஞ்செயா டி சில்வா களமிறங்கினார்.
இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த பதும் நிஷங்கா 5 பவுண்டரி, ஒரு சிக்சர் என 39 ரன்களையும், தனஞ்செயா டி சில்வா 2 பவுண்டரிகளுடன் 15 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் இலங்கை அணி 10.5 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன், 9 விக்கெட் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேவை வீழ்த்தி வெற்றிபெற்றது. இதன்மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை இலங்கை அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.