முத்தரப்பு ஒருநாள் தொடர்: சமாரி அத்தபத்து தலைமையிலான இலங்கை அணி அறிவிப்பு!
இம்மாத இறுதியில் இலங்கை, இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு ஒருநாள் தொடரானது இலங்கையில் நடைபெறவுள்ளது. அதன்படி இந்த முத்தரப்பு ஒருநாள் தொடரானது இலங்கையில் ஏப்ரல் 27ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது.
இந்த முத்தரப்பு ஒருநாள் தொடரில் ஒவ்வொரு அணியும் தலா 4 போட்டிகளில் விளையாடவுள்ளது. அதில் புள்ளிப்பட்டியலில் முதலிரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டியில் விளையாடவுள்ளன. இத்தொடரின் முதல் போட்டியில் இலங்கை மகளிர் அணியை எதிர்த்து இந்திய மகளிர் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இத்தொடரின் அனைத்து போட்டிகளும் கொழும்புவில் உள்ள ஆர் பிரமதோசா கிரிக்கெட் மைதானத்தில் மட்டுமே நடைபெறவுள்ளது.
இந்தாண்டு இந்தியாவில் ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கும் நிலையில், அத்தொடருக்கு தயாராகும் வகையில் இந்த முத்தரப்பு தொடரானது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேற்கொண்டு கடந்த 2013ஆம் ஆண்டிற்கு பிறகு இந்தியாவில் மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கும் நிலையில், இந்திய மகளிர் அணிக்கு இந்த முத்தரப்பு ஒருநாள் தொடர் முக்கியமானதாக கருதபடுகிறது.
மேலும் இத்தொடருக்கான இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க மகளிர் அணிகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் இத்தொடருக்கான 17 பேர் அடங்கிய இலங்கை மகளிர் அணியை இன்று அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி சமாரி அத்தபத்து தலைமையிலான இந்த இலங்கை ஒருநாள் அணியில் அறிமுக வீராங்கனை மல்கி மதராவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதுதவிர்த்து விஷ்மி குணரத்ன, நிலக்ஷி சில்வா, ஹாசினி பெரேரா, பியூமி வத்சலா, டெவ்மி விஹங்கா, இனோகா ரணவீர மற்றும் ஹன்சிமா கருணாரத்ன உள்ளிட்டோரும் மீண்டும் இலங்கை ஒருநாள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து ஏப்ரல் 27ஆம் தேதி நடைபெறும் இத்தொடரின் முதல் லீக் போட்டியில் வலிமையான இந்திய மகளிர் அணியை எதிர்த்து இலங்கை மகளிர் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இலங்கை மகளிர் அணி: சாமரி அத்தபத்து (கேப்டன்), விஷ்மி குணரத்னே, ஹர்ஷிதா சமரவிக்ரம, நிலக்ஷி சில்வா, கவிஷா தில்ஹாரி, அனுஷ்கா சஞ்சீவனி, ஹசினி பெரேரா, பியூமி வத்சலா, மனுடி நாணயக்கார, தேவ்மி விஹங்கா, இனோகா ரணவீர, இனோஷி பெர்னாண்டோ, ஹன்சிமா கருணாரத்ன, ரஷ்மிகா செவ்வந்தி, மல்கி மதரா, சுகந்திகா குமாரி, அச்சினி குல்சூரிய
Also Read: LIVE Cricket Score
மகளிர் ஒருநாள் முத்தரப்பு தொடர் அட்டவணை:
- ஏப்ரல் 27 - இலங்கை vs இந்தியா
- ஏப்ரல் 29 - இந்தியா vs தென் ஆப்பிரிக்கா
- மே 1 - இலங்கை vs தென் ஆப்பிரிக்கா
- மே 4 - இலங்கை vs இந்தியா
- மே 6 - தென் ஆப்பிரிக்கா vs இந்தியா
- மே 8 - இலங்கை vs தென்ஆப்பிரிக்கா
- மே 11- இறுதிப்போட்டி