இலங்கை அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியானது மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸை வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணியானது கேப்டன் தனஞ்செயா டி சில்வா மற்றும் அறிமுக வீரர் மிலன் ரத்நாயக்கா ஆகியோரது பொறுப்பான ஆட்டத்தின் மூலம் முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தாலும், 236 ரன்களைச் சேர்த்தது. 

Advertisement

இதில் அதிகபட்சமாக கேப்டன் தனஞ்செயா டி சில்வா 74 ரன்களையும், மிலன் ரத்நாயக்கா 72 ரன்களையும் சேர்த்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் கிறிஸ் வோக்ஸ் மற்றும் ஷோயப் பஷிர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த இங்கிலாந்து அணியில் பென் டக்கெட் 18 ரன்களிலும், டேன் லாரன்ஸ் 30 ரன்களிலும், கேப்டன் ஒல்லி போப் 6 ரன்களிலும் என விக்கெட்டுகளை இழந்தனர்.  பின்னர் களமிறங்கிய ஜோ ரூட் 42 ரன்களுக்கும், ஹாரி புரூக் 56 ரன்களுக்கும், கிறிஸ் வோக்ஸ் 25 ரன்களுக்கும் என ஆட்டமிழந்தனர்.

Advertisement

அதனைத்தொடர்ந்து களமிறங்கிய ஜேமி ஸ்மித் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தையும் பதிவுசெய்து மிரட்டினார். பின்னர் 111 ரன்கள் எடுத்த நிலையில் ஜேமி ஸ்மித்தும் விக்கெட்டை இழக்க, இங்கிலாந்து அணியானது முதல் இன்னிங்ஸில் 358 ரன்களைச் சேர்த்த நிலையில் ஆல் அவுட்டானது. இலங்கை அணி தரப்பில் அசிதா ஃபெர்னாண்டோ 4 விக்கெட்டுகளையும், பிரபாத் ஜெயசூர்யா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இருப்பினும் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 118 ரன்கள் முன்னிலை பெற்றது. 

பின்னர் இரண்டாம் இன்னிங்ஸைத் தொடர்ந்த இலங்கை அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியளிக்கும் வகையில் நிஷன் மதுஷ்கா மற்றும் குசால் மெண்டிஸ் ஆகியோர் ரன்கள் ஏதுமின்றி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். பின்னர் இணைந்த திமுத் கருணரத்னே - ஏஞ்சமோ மேத்யூஸ் இணை நிதானமாக விளையாடியதுடன் அணியின் ஸ்கோரையும் உயர்த்தினர். இதில் திமுத் கருணரத்னே 27 ரன்களில் ஆட்டமிழந்து நடையைக் கட்ட, அடுத்து களமிறங்கிய கேப்டன் தனஞ்செயா டி சில்வாவும் 11 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். 

பின்னர் மேத்யூஸுடன் இணைந்த கமிந்து மெண்டிஸும் அபாரமாக விளையாட அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இதில் ஏஞ்சலோ மேத்யூஸ் தனது அரைசதத்தையும் பதிவுசெய்து அசத்தினர். இருவரும் இணைந்து 80 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்த நிலையில் 2 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 65 ரன்களை எடுத்திருந்த ஏஞ்சலோ மேத்யூ ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய மிலன் ரத்நாயக்கவும் 10 ரன்களுடன் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் கமிந்து மெண்டிஸூடன் இணைந்துள்ள தினேஷ் சண்டிமால் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். 

இதில் கமிந்து மெண்டிஸ் தனது அரைசதத்தை பதிவுசெய்தார். இதன்மூலம் இலங்கை அணியானது மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 204 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் கமிந்து மெண்டிஸ் 56 ரன்களுடனும், தினேஷ் சண்டிமால் 20 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து அணி தரப்பில் கிறிஸ் வோக்ஸ் 2 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இதனைத்தொடர்ந்து 82 ரன்கள் முன்னிலையுடன் இலங்கை அணியானது இன்று நான்காம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News