ENG vs SL, 3rd Test: நிஷங்கா, தனஞ்செயா, கமிந்து அரசைதம்; முன்னிலை நோக்கி இலங்கை அணி!
இலங்கை அணியானது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து அணியானது வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன் 2-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியானது லண்டனில் உள்ள கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணியில் டேனியல் லாரன்ஸ் 5 ரன்களில் விக்கெடை இழக்க, அதன்பின் டக்கெட்டுடன் ஜோடி சேர்ந்த கேப்டன் ஒல்லி போப் அதிரடியாக விளையாடியதுடன் அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினர். தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த இருவரும் தங்களது அரைசதங்களைப் பதிவுசெய்து அசத்தினர். அதன்பின்னரும் அதிரடியாக விளையாடி வந்த பென் டக்கெட் 9 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 86 ரன்களை எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். பின்னர் களமிறங்கிய நட்சத்திர வீரர் ஜோ ரூட் 13 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார்.
அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ஹாரி புரூக் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுபக்கம் அபாரமாக விளையாடி வந்த கேப்டன் ஒல்லி போப் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 7ஆவது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். இதன்மூலம் இங்கிலாந்து அணியானது முதல் இன்னிங்ஸில் 44.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 221 ரன்களை எடுத்திருந்த நிலையில் போதிய வெளிச்சமின்மை காரணமாக இப்போட்டி தடைபட்டது. அதன்பின்னரும் நிலைமை சாதகமாக அமையாத காரணத்தால் இப்போட்டியின் முதல்நாள் ஆட்டமானது முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தை ஒல்லி போப் 103 ரன்களுடனும், ஹாரி புரூக் 8 ரன்களுடனும் தொடர்ந்தனர். இதில் ஹாரி ப்ரூக் 19 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ஜேமி ஸ்மித் 16 ரன்களுக்கும், கிறிஸ் வோக்ஸ் 2 ரன்களுக்கும் என ஆட்டமிழக்க, மறுபக்கம் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஒல்லி போப் 154 ரன்களில் விக்கெட்டை இழந்தார். இதன் காரணமாக இங்கிலாந்து அணி 325 ரன்களைச் சேர்த்த நிலையில் ஆல் அவுட்டானது. இலங்கை தரப்பில் மிலன் ரத்நாயக்கா 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
இதனையடுத்து களமிறங்கிய இலங்கை அணியில் தொடக்க வீரர் திமுத் கருணரத்னே 9 ரன்களை மட்டுமே சேர்த்த நிலையில் விக்கெட்டை இழக்க, அவரைத் தொடர்ந்து வந்த குசால் மெண்டிஸ் 14 ரன்களுக்கும், ஏஞ்சலோ மேத்யூஸ் 3 ரன்களுக்கும், தினேஷ் சண்டிமால் ரன்கள் ஏதுமின்றியும் என விக்கெட்டை இழந்தனர். அதேசமயம் மற்றொரு தொடக்க வீரரான பதும் நிஷங்காவும் அரைசதத்தை பதிவுசெய்திருந்த நிலையில் 64 ரன்களில் விக்கெட்டை இழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்துள்ள கேப்டன் தனஞ்செயா டி சில்வா - கமிந்து மெண்டிஸ் இணை அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
Also Read: Funding To Save Test Cricket
இருவரும் தங்கள் அரைசதத்தை பதிவுசெய்து அசத்தியதுடன், 6ஆவது விக்கெட்டிற்கு 100 ரன்களுக்கு மேல் பார்டனர்ஷிப் அமைத்தும் அசத்தினர். இதன்மூலம் இலங்கை அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 211 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் தனஞ்செயா டி சில்வா 64 ரன்களுடனும், கமிந்து மெண்டிஸ் 54 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து தரப்பில் ஒல்லி ஸ்டோய்ன் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனையடுத்து 114 ரன்கள் பின் தங்கிய நிலையில் இலங்கை அணி இன்று மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது.