சாதனை நிகழ்த்த காத்திருக்கும் புவனேஷ்வர் குமார்!
இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையேயான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற்ற நிலையில், 3வது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. 3 போட்டிகளின் முடிவில் தென்னாப்பிரிக்க அணி 2-1 என முன்னிலை வகிக்கிறது.
இந்த தொடரில் புவனேஷ்வர் குமார் செம ஃபார்மில் அருமையாக பந்துவீசிவருகிறார். முதல் போட்டியில் ஒரு விக்கெட் மட்டுமே வீழ்த்திய புவனேஷ்வர் குமார், 2வது போட்டியில் அபாரமாக பந்துவீசி 4 ஓவரில் வெறும் 13 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டை வீழ்த்தினார். புவனேஷ்வர் குமாரின் ஸ்விங்கை எதிர்கொள்ளமுடியாமல் தென்னாப்பிரிக்க வீரர்கள் திணறுகின்றனர்.
புவனேஷ்வர் குமார் புதிய பந்தில் நன்றாக ஸ்விங் செய்வதால் அதிகமான விக்கெட்டுகளை பவர்ப்ளேயில் வீழ்த்துகிறார். 2வது டி20 போட்டியில் வீழ்த்திய 4 விக்கெட்டுகளில் 3 விக்கெட் பவர்ப்ளேயில் வீழ்த்தினார். அந்த 3 விக்கெட்டுடன் சேர்த்து புவனேஷ்வர் குமார் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் பவர்ப்ளேயில் 33 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
இதன்மூலம் பவர்ப்ளேயில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலர்களில் வெஸ்ட் இண்டீஸின் சாமுவேல் பத்ரி மற்றும் நியூசிலாந்தின் டிம் சௌதி ஆகிய இருவருடன் புவனேஷ்வர் குமார் முதலிடம் வகிக்கிறார்.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3 டி20யில் பவர்ப்ளேயில் ஒரு விக்கெட் வீழ்த்தியிருந்தால், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் பவர்ப்ளேயில் அதிக விக்கெட் வீழ்த்திய பவுலர் என்ற சாதனையை படைத்திருப்பார். அந்த போட்டியில் ஒரு விக்கெட் மட்டுமே வீழ்த்திய புவனேஷ்வர் குமார், அதை டெத் ஓவரில் தான் வீழ்த்தினார். எனவே அந்த சாதனையை 3ஆவது டி20யில் படைக்க முடியாமல் போனது.
இன்று ராஜ்கோட்டில் நடக்கும் 4ஆவது டி20 போட்டியில் பவர்ப்ளேயில் ஒரு விக்கெட் வீழ்த்தினால், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் பவர்ப்ளேயில் அதிக விக்கெட் வீழ்த்திய பவுலர் என்ற சாதனையை படைப்பார் புவனேஷ்வர் குமார்.