IND vs AUS, 1st Test: சீறிய சிராஜ், ஷமி; கம்பேக் கொடுத்த லபுசாக்னே - ஸ்மித்!
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் டிராபி தொடரின் முதல் டெஸ்ட் போட்டி இன்று நாக்பூரில் தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ் மற்றும் விக்கெட் கீப்பர் கேஎஸ் பரத் ஆகிய இருவரும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகியுள்ளனர். ஆஸ்திரேலிய அணியில் டாட் மர்ஃபி என்ற ஸ்பின்னர் அறிமுகமானார்.
இந்திய ஆடுகளங்கள் ஸ்பின்னிற்கு சாதகமாக இருக்கும். அதனால் ஸ்பின்னை எதிர்கொள்வதுதான் சவால் என்பதால் அதில் அதிக கவனம் செலுத்திய ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் வேகப்பந்துவீச்சை பெரியளவில் சீரியஸாக எடுக்கவில்லை. அவர்களின் கவனம் ஸ்பின்னர்கள் மீது இருந்த நிலையில், இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் ஷமியும் சிராஜும் சர்ப்ரைஸ் செய்தனர்.
இன்னிங்ஸின் முதல் ஓவரை ஷமி வீசினார். 2ஆவது ஓவரை வீசிய சிராஜ், முதல் பந்திலேயே உஸ்மான் கவாஜாவை எல்பிடபிள்யூ செய்து வெளியேற்றினார். அதற்கு அம்பயர் அவுட் கொடுக்கவில்லை. இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா அதை ரிவியூ செய்தார். ரிவியூவில் அவுட் உறுதியானதால் கவாஜா ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார்.
அதற்கடுத்த ஓவரிலேயே டேவிட் வார்னரின் ஆஃப் ஸ்டம்ப்பை பிடுங்கி எறிந்தார் ஷமி. வார்னரும் ஒரு ரன்னில் ஆட்டமிழக்க, 2 ரன்னுக்கே ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட்டை இழந்துவிட்டது. பின்னர் ஜோடி சேர்ந்த மார்னஸ் லபுசாக்னே - ஸ்டீவ் ஸ்மித் இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பைத்தடுத்தனர்.
அதன்பின் பந்துவீச வந்த ரவீந்திர ஜடேஜா, அக்ஸர் படேல், ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோரது பந்துவீச்சை தாக்குப்பிடித்து விளையாடிய இருவரும் சேர்த்து 50 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர். இதன்மூலம் முதல்நாள் உணவு இடைவேளையின் போது ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 76 ரன்களைச் சேர்த்துள்ளது.
ஆஸ்திரேலிய அணி தரப்பில் மார்னஸ் லபுசாக்னே 47 ரன்களுடனும், ஸ்டீவ் ஸ்மித் 19 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணி தரப்பில் முகமது சிராஜ், முகமது ஷமி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றியுள்ளனர்.