சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த ஸ்டீவ் ஸ்மித்; ரசிகர்கள் அதிர்ச்சி!

Updated: Wed, Mar 05 2025 15:00 IST
Image Source: Google

பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடரானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற முதல் அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இதனால் இத்தொடரில் கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக கணிக்கப்பட்டிருந்த ஆஸ்திரேலியா அரையிறுதிச்சுற்றுடன் வெளியேறியது. இந்நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் ரசிகர்கள் இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் அந்த அணியின் நட்சத்திர வீரரும், நடப்பு சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணியை கேப்டனாக வழிநடத்தியவருமான ஸ்டீவ் ஸ்மித் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்து ரசிகர்களுக்கு மேலும் அதிர்ச்சியளித்துள்ளார்.

சர்வதேச அரங்கில் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக இருந்து வரும் ஸ்டீவ் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்திருப்பது ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஏனெனில் நேற்றைய போட்டியிலும் கூட சிறப்பாக செயல்பட்டிருந்த ஸ்டீவ் ஸ்மித் அரைசதம் கடந்ததுடன் 73 ரன்களைச் சேர்த்து அணியை வலுவான நிலைக்கு அழைத்து சென்றிருந்தார். இப்படியான நிலையில் அவர் திடீரென ஓய்வை அறிவித்திருப்பது ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக அமைந்துள்ளது.

இந்நிலையில் தனது ஓய்வு முடிவு குறித்து பேசிய ஸ்டீவ் ஸ்மித், இது ஒரு சிறந்த பயணமாக இருந்தது, அதன் ஒவ்வொரு நிமிடத்தையும் நான் ரசித்திருக்கிறேன். இரண்டு உலகக் கோப்பைகளை வென்றது, பயணத்தைப் பகிர்ந்து கொண்ட பல அற்புதமான அணி வீரர்களுடன் சேர்ந்து ஒரு சிறந்த சிறப்பம்சமாக இருந்தது. 2027 உலகக் கோப்பைக்குத் தயாராகத் தொடங்குவதற்கு இப்போது இளம் வீரர்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பு, எனவே எனது வழியைத் தேர்ந்தெடுத்துக்கொள்ள இதுவே சரியான நேரம் என்று உணர்கிறேன்.

எப்போதும் டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு முன்னுரிமை உள்ளது. மேலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி, வெஸ்ட் இண்டீஸ் தொடர், பின்னர் சொந்த மண்ணில் இங்கிலாந்து தொடர் ஆகியவற்றை நான் மிகவும் ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கிறேன். டெஸ்ட் கிரிக்கெட்டில் நான் இன்னும் நிறைய பங்களிக்க வேண்டும் என்று நினைக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். இதனையடுத்து அவருக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகிறது. 

Also Read: Funding To Save Test Cricket

ஆஸ்திரேலிய அணிக்காக கடந்த 2010ஆம் ஆண்டு சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமான ஸ்டீவ் ஸ்மித் இதுநாள் வரை 170 ஒருநாள் போட்டிகளில் 154 இன்னிங்ஸ்களில் விளையாடி 12 சதங்கள், 35 அரைசதங்கள் என 5,800 ரன்களைக் குவித்துள்ளார். இதுதவிர்த்து பந்துவீச்சில் 28 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். மேற்கொண்டு 2015 மற்றும் 2023ஆம் ஆண்டு ஐசிசி ஆடவர் ஒருநாள் உலகக்கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணியிலும் முக்கிய பங்கு வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை