இலங்கை தொடருக்கு முன் பின்னடைவை சந்தித்த இங்கிலாந்து; தொடரில் இருந்து விலகுகிறாரா பென் ஸ்டோக்ஸ்?

Updated: Mon, Aug 12 2024 13:13 IST
Image Source: Google

இங்கிலாந்து அணி சமீபத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. அதன்படி இத்தொடரின் முடிவில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இங்கிலாந்து அணியானது 3-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியதுடன், வெஸ்ட் இண்டீஸ் அணியையும் ஒயிட்வாஷ் செய்து அசத்தியது. இதனையடுத்து அந்த அணி இலங்கை அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. 

அதன்படி இங்கிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையேயான இந்த டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 21ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 10ஆம் தேதி முடிவடையவுள்ளது. இந்நிலையில் இத்தொடருக்கான இரு அணிகளும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டன. மேலும் இத்தொடரில் பங்கேற்கும் இலங்கை அணியானது நேற்றைய தினம் இங்கிலாந்து சென்றடைந்ததுடன், இன்று முதல் பயிற்சியை தொடரவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் இத்தொடரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் அங்கமாக நடைபெற இருப்பதால் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இத்தொடருக்கு முன்னதாக இங்கிலாந்து அணிக்கு மிகப்பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அதன்படி அணியின் கேப்டனும் நட்சத்திர ஆல் ரவுண்டருமான பென் ஸ்டோக்ஸ் காயம் காரணமாக இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து விலகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் தி ஹண்ட்ரட் கிரிக்கெட் தொடரில் நார்தன் சூப்பர்சார்ஜர்ஸ் அணிக்காக பென் ஸ்டோக்ஸ் விளையாடி வருகிறார். இந்நிலையில் நேற்று நடைபெற்ற மான்செஸ்டர் ஒரிஜினல்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியின் போது பென் ஸ்டோக்ஸ் காயமடைந்து போட்டியில் இருந்து பாதியிலேயே வெளியேறினார். இதனையடுத்து அவருக்கு இன்று ஸ்கேன் பரிசோதனையும் செய்யபடவுள்ளது. 

ஒருவேளை ஸ்கேன் பரிசோதனை முடிவில் பென் ஸ்டோக்ஸின் காயம் தீவிரமடைந்திருக்கும் பட்சத்தில் அவர் இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து விலகுவார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கெனவே இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ஸாக் கிரௌலி காயம் காரணமாக தொடரில் இருந்து விலகியுள்ள நிலையில், தற்சமயம் அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸும் காயமடைந்திருப்பது அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. 

இங்கிலாந்து டெஸ்ட் அணி: பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), கஸ் அட்கின்சன், சோயிப் பஷீர், ஹாரி புரூக், ஜோர்டான் காக்ஸ், பென் டக்கெட், டேனியல் லாரன்ஸ், ஒல்லி போப், மேத்யூ பாட்ஸ், ஜோ ரூட், ஜேமி ஸ்மித், ஒல்லி ஸ்டோன், கிறிஸ் வோக்ஸ், மார்க் வூட்.

இலங்கை டெஸ்ட் அணி: தனஞ்செயா டி சில்வா (கேப்டன்), திமுத் கருணாரத்னே, நிஷான் மதுஷ்கா, பதும் நிஷங்க, குசல் மெண்டிஸ், ஏஞ்சலோ மேத்யூஸ், தினேஷ் சண்டிமால், கமிந்து மெண்டிஸ், சதிர சமரவிக்ரமா, அசித்த ஃபெர்னாண்டோ, விஷ்வ ஃபெர்னாண்டோ, கசுன் ராஜித, லஹிரு குமார, நிசல தாரக, பிரபாத் ஜெயசூர்ய, ரமேஷ் மெண்டிஸ், ஜெப்ரி வான்டர்சே, மிலன் ரத்நாயக்க.

Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy

இங்கிலாந்து - இலங்கை டெஸ்ட் தொடர்

  • முதல் டெஸ்ட் - ஆகஸ்ட் 21 - 25 - மான்செஸ்டர்
  • இரண்டாவது டெஸ்ட் - ஆகஸ்ட் 29 - செப்.02 - லண்டன்
  • மூன்றாவது டெஸ்ட் - செப்.06 - 10 - லண்டன்
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை